இரணைமடுக்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

Tuesday, December 22nd, 2020


வடக்கு மகாணத்தில் பருப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி அதிகரித்துவருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் இரண்டு வான்கதவுகள் 6 அங்குலம் அளவில் திறந்துவிடப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் இன்று (22-12-2020) செவ்வாய்க்கிழமை 5 மணியளவில் இரண்டு வான்கதவுகளை 6 அங்குலம் அளவில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.

மாவட்ட நீர்ப்பாச பொறியியலாளர் ராஜகோபு, இரணைமடுக்குள நீர்ப்பாசன பொறியியலாளர் செந்தில்குமரன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் கோ.றுஷாங்கனும் கலந்துகொண்டிருந்தார்.

வவுனியா முதல், கனகராயன்குளம், மாங்குளம் ஈறாக இரணைமடுக்குளம் வரையிலான 560 சதுர கிலோமீற்றர் பரப்பளவு நிலப்பரப்பிலிருந்து இரணைமடுக்குளத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், தொடர்ந்து பெய்யக்கூடிய மழையினால் குளத்தின் அதியுயர் தாங்குமட்டமான 36 அடியை அண்மிக்க முதல் நீரின் அளவைக் குறைக்கும் முகமாக இன்றையதினம் இரண்டு வான்கதவுகள் 6 அங்குலம் அளவில் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

மழைவீழ்ச்சி தொடருமானால், ஏனைய வான்கதவுகளும் தொடர்ந்து படிப்படியாகத் திறக்கப்படும் என்றும் தெரிவித்த அவர்கள், எனினும், தற்போதைய நிலையில் இதுகுறித்து மக்கள் அதிகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினர்.

Related posts: