இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப்பு!

Friday, March 5th, 2021

யாழ்.மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் வழங்கப்பட்ட 40 ஆசிரியர்களும், கல்வியல் கல்லூரியின் 4 ஆசிரியர்களும் மாவட்டத்திற்கு இதுவரை சமுகமளிக்காத காரணத்தினால் உடன் பணி இடை நிறுத்தம் வழங்குமாறு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் உத்தரவு வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

முன்பதாக 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடமாற்றத்தின் மூலம் 2021 – 01-01 முதல் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்ற வேண்டிய 40 ஆசிரியர்கள் இன்றுவரை மன்னாரிற்கு சமூகமளிக்கவில்லை என இணைத்தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பு  இணைத் தலைவரான மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன் இறுதியாக கல்வியியல் கல்லூரியில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களில் 59 ஆசிரியர்கள் மன்னாரிற்கு நியமிக்கப்பட்டனர். இருப்பினும் 55 பேர் மட்டுமே கடமையை பொறுப்பேற்ற போதும் நால்வர் மாவட்டத்திற்கே தெரியாது இடமாற்றம் பெற்றுவிட்டனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது இடமாற்றம் வழங்கப்பட்ட 40 ஆசிரியர்களும் உடன் மன்னாரில் கடமையை பொறுப்பேற்க வேண்டும் அல்லது உடனடியாக இடை நிறுத்தம் வழங்குமாறும் உத்தரவிட்ட ஆளுநர் கல்வியல் கல்லூரியின் 4 ஆசிரியர்களிற்கும் வழங்கப்பட்ட நியமன மாற்றத்தை இரத்துச் செய்வதோடு இடமாற்றத்தை அனுமதித்த அதிகாரிகளின் விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: