ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்ட முயற்சி – பருத்தித்துறையில் நேற்று பரபரப்பு!

Wednesday, November 2nd, 2016

வாள்வெட்டில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் வெட்ட  வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற கும்பலால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று பதற்ற நிலை ஏற்பட்டது.

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கதவை மூடி அவர்களை உள்நுழைய விடாமல் தடுத்ததால் பாரிய விபரீதங்கள் தவிர்க்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக தெரியவருவதாவது –

துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் வாள்வெட்டில் முடிவடைந்தது. வாள்வெட்டுக்கு இலக்காகிய சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை வெட்டிய கும்பலைச் சேர்ந்தோர் மீண்டும் அவர்களை வெட்டும் நோக்கில் வெறியோடு வாள்களுடன் வைத்தியாசலைக்குள் நுழைய முயன்றனர். இதனால் வைத்தியசாலைக்கு வந்திருந்த நோயாளர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் வைத்தியசாலை வாயில் கதவுகளை இழுத்து மூடி வாள்களுடன் நின்ற கும்பலை உள்நுழைய விடாமல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்தனர்.

உடனடியாக இதுகுறித்து பருத்தித்துறை பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் நெல்லியடி பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனையடுத்து கொலை வெறியோடு வந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதனையடுத்தே வைத்தியசாலை கதவுகளைத் திறந்து பொலிஸார் பாதுகாப்பை உறுதி செய்தனர்.

watermarked-DSCF8148

Related posts: