ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்கும் சக்தி விளையாட்டுத் துறைக்கே உண்டு – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Monday, June 11th, 2018

ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்கும் சக்தி விளையாட்டுத் துறைக்கே உண்டு. அந்தவகையில் எமது இளம் சந்ததியினரின் உடல் உளம் சார்ந்த திறன்களை விருத்தி செய்யும் ஆற்றல்கொண்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்த நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் என ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக் கழகம் நடத்திய தீவக நாயகர்கள் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்துக்கான  பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கிவைத்த பின்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

விளையாட்டினூடாக  ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளல், விட்டுக் கொடுப்பு, மதிப்பளிக்கும் தன்மை போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொள்ளமுடியும். அதனடிப்படையில் தான் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலத்தில் இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்காக பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் அவற்றை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்.

அந்தவகையில் விளையாட்டுத் துறை வளர்ச்சிகாணும்போதுதான் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயமொன்று உருவாக்க முடியும் என்பதற்கிணங்க விளையாட்டுத்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு தொடர்ந்தும் நாம் தயாராகவுள்ளோம் என்றார்.

இதனிடையே நடைபெற்ற சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ்  விளையாட்டுக் கழகம் எதிர் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழகம் ஆகியன மோதிக்கொண்ட இறுதிப் போட்டியில் குறிஞ்சிக்குமரன் அணி வெற்றியீட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: