ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய 3772 பேரையும் சேவையில் இணைக்க துரித நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, January 5th, 2021

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய மூவாயிரத்து 772 பேரையும் சேவைக்கு இணைந்துக் கொள்ளும் செயற்பாடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்பவர்களுக்கான நியமனக் கடிதங்களை அவர்களின் வீடுகளுக்கே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ். சுபோதிகா தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் 11 ஆம் திகதி பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறிறுள்ளார்.

புதிய நியமனங்கள் வழங்கப்படும் ஆசிரியர்களில் 1000 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அனைவரும் மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும், இறுதி ஆண்டு பரீட்சையில் பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: