அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று ஆரம்பம் – வழிமுறைகள் தொடர்பில் துணைவேந்தர்களுக்கு அறிவித்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, August 17th, 2020

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட்கிழமைமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவித்தப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளில் அறையொன்றில் தங்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எந்தவொரு தடையுமின்றி மாணவர்கள் வழமை போன்று விடுதியில் தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடுதியின் அறையில் தங்கும் மாணவர்கள் குறிப்பிட்ட வருடத்தை சேர்ந்த மாணவர் குழுவாக இருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுவதோடு, ஏனைய ஆண்டு மாணவர்களை கலப்பாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், விடுதிகளுக்கு வருகைதரும் விருந்தினர்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அவ்வாறு வருபவர்களின் பெயர் விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறும் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பல்கலைகழகங்களின் அனைத்து ஆண்டு மாணவர்களுக்குமான கற்றல் செயற்பாடுகளும் இன்றையதினம் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பல்கலைகழகங்களில் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் தாமதம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சில பல்கலைகழகங்களில் நிர்வாக அதிகாரிகளால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில பல்கலைகழகங்களில் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக மாணவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய களினி பல்கலைகழகத்தின் சகல மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த பல்கலைகழகத்தின் ஊடக பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

மாணவர் விடுதிகளில் இடவசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு காலம் அவசியம் தேவை என்பதால் களனி பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பல்கலைகழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசந்த லியனகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளமையினால் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களும், கலைப் பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களும் இன்று பல்கலைகழகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் கற்றல் செயற்பாடுகளுக்காக சகல ஆண்டு மாணவர்களையும் பல்கலைகழகத்திற்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்கலைகழகங்களை ஆரம்பிப்பதற்கான உரிய சுகாதார பரிந்துரைகள் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரத்கரவ்வே ஜினரதன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பரீட்சைகளின் நிமித்தம் கட்டம் கட்டமாக திறப்பதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: