அதிகாரப் பகிர்வு குறித்து கவனத்திற்கொள்ளப்படும் – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்..பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் புதிய அரசியலமைப்பில் அது கவனத்திற்கொள்ளப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்..பீரிஸ் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சில தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் The Hindu பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாகவும் நிபுணர் குழுவொன்று அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு விடயம் சந்தேகத்திற்கிடமின்றி கவனத்திற்கொள்ளப்படும் என அமைச்சர் தனது இந்திய விஜயத்தின் போது The Hindu பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், எதனை செய்தாலும் நாட்டில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்பதுடன், பாரியளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டால் களத்தில் செயற்படுவது கடினமாக இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேசுவதற்கு தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருதாகவும் இலங்கையின் அரசியல் கட்சிகள், முதன்மையாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை தொடர்பில் அறிவிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறாமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

கொரோனா உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இதன்போது தலையீடு செய்ததாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: