தரமற்ற கிரவலைக் கொண்டு வீதிப் புனரமைப்பு – வேலைகள் மக்கள் விசனம்!

Tuesday, January 9th, 2018

மாங்குளம் பகுதியில் ஏ – 9 வீதியில் இருந்து புதிய கொலனி குடியிருப்பு நோக்கிச் செல்லும் முத்துமாரியம்மன் வீதிப் புனரமைப்பு வேலைகளுக்கு தரமற்ற கிரவல் மண்ணைப் பயன்படுத்தப்படுவதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.

இதனால் பெரும் தொகை அரச பணம் வீண்விரயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி தரமான முறையில் வீதிப் புனரமைப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து உதவுமாறு இந்த வீதியைப் பயன்படுத்தும் கிராம மக்கள் இணைந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜெ.ராஜமல்லிகையிடம் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

மீள் குடியேற்ற அமைச்சின் 15 இலட்சம் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதியில் ஆயிரம் மீற்றர் தூரம் புனரமைக்கப்படுகின்றது.

தற்போது வீதி அகலிப்புடன், கிரவல் மண் இட்டும் மற்றும் கழிவு நீர் துருசுக்கள் அமைத்தும் புனரமைப்பு செய்வதற்காக மாங்குளம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் வேலைகள் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையை பொறுப்பேற்ற கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மாங்குளம் ஊடாகச் செல்லும் புகையிரதப் பாதையின் புனரமைப்புக்காக அகற்றப்பட்ட கழிவு மண்ணைப் பயன்படுத்தி முத்துமாரியம்மன் வீதி புனரமைப்பை மேற்கொண்டு வருவதாகவும், வீதியில் பரவப்படும் கழிவு மண்ணுடன் குப்பைகளையும் சேர்ந்து புனரமைப்பு செய்யப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டி ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts: