இயற்கை இடர்களால் வளர்ச்சி குறைகிறது – உலக வங்கியின் ஆய்வு அறிக்கை கூறுகின்றது!

Wednesday, December 6th, 2017

இயற்கை இடர்களின் காரணமாக இலங்கையின் வளர்ச்சி வீதமானது 2017 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப் பகுதியிலும் பெரும் வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான உலக வங்கியின் ஆய்வறிக்கையின் விளக்கவுரை யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிடப் பணிப்பாளர் ஜடா ஸ்வராய் ரிடில்கொவ் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான மூத்த வதிவிடப் பொருளியலாளரான ரல்ப் வன் டூர்ண் ஆகியோர் கருத்துக்கள் தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்ததாவது:

வெள்ளம் மற்றும் வரட்சி காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் கட்டடத் தொழிற்றுறையிலும் வெளியகத்துறையிலும் ஏற்பட்ட பெரும் தாக்கம் காரணமாக 2017 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியில் இலங்கையின் வளர்ச்சியானது 3.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

குடும்பங்கள் நிறுவனங்கள் பொதுத்துறை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்துவதற்காக இந்த இடர்களை முகாமைத்துவம் செய்வது அவசியமாகும்.

சவால்கள் காணப்பட்ட போதிலும் 2017 இல் இலங்கை பரந்தளவில் திருப்திகரமான பொருளாதார செயற்றிறனைக் காண்பிக்கின்றதுடன் அடிக்கடி அதிகரித்து வருகின்ற இயற்கை இடர்களை தாக்குப் பிடிக்கத் தயாராக வேண்டியுள்ளது.

2017 மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை இலங்கை மீளப் பெற்றுக் கொண்டது. இலங்கை அரசானது பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் புதியதொரு உள்நாட்டு வருமான சட்டம் நிறைவேற்றப்பட்டமையானது இதில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது என்றனர்.

Related posts: