அர்ஜுன் மகேந்திரனுக்கு தண்டனையா?

Wednesday, October 12th, 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படுவது குறித்து நாளை மறுதினம் ஜனாதிபதி தீர்மானிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்துள்ள மாபெரும் ஊழலாக வர்ணிக்கப்படும் மத்திய வங்கி பிணை முறிகள் ஊழல் விவகாரத்தில் அர்ஜுன் மகேந்திரன் மீது கூட்டு எதிர்க்கட்சி மாத்திரமன்றி, சுதந்திரக் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அத்துடன் மத்திய வங்கியின் பிணைமுறிகளை முறைகேடான வகையில் கொள்வனவு செய்ததாக குற்றம் சாட்டப்படும் பர்பெசுவல் டிரஷரீஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் பலநூறு மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது.

இது அர்ஜுன் மகேந்திரனின் மருமகனுடைய நிறுவனம் என்பதுடன், பத்துக்கும் குறைவான நபர்களே பணியாற்றும் சிறு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிலையில் அர்ஜுன் மகேந்திரன் காலத்தில் நடைபெற்ற மத்திய வங்கியின் நிதிமோசடிகள் குறித்து ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன தலைமையில் தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

நிதி ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ள இந்தக் கலந்துரையாடலின் போது பெரும்பாலும் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கையொன்றுக்கு ஜனாதிபதி உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அவர் மத்திய வங்கி ஆளுனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது போதாது என்றும் தண்டனையொன்றுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மத்தியில் அபிப்பிராயம் ஒன்று நிலவுகின்றது.

அவ்வாறு ஜனாதிபதி உத்தரவிடும் பட்சத்தில் தேசிய அரசாங்கத்தினுள் பாரிய கருத்து மோதல் ஏற்படலாம் என்று கருதப்படுகின்றது. ஏனெனில் அர்ஜுன் மகேந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

arjuna

Related posts: