மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

மாகாணத்திற்குள் இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் வைத்திருப்பதானது, அந்த மாகாண மக்களின் உணர்வுகளை மலினப்படுத்துவதாகும். உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கே இருக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் 10ஆம் பிரிவினையும், முதன்மைச் சட்டவாக்கத்தின் 13ஆம் பிரிவினையும் 17ஆம் பிரிவினையும் திருத்துவதற்கும், இச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை நாம் வரவேற்கின்றோம்.
மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், மத்திய அரசாங்கத்துடன், மாகாணசபைகள் எவ்வாறு தேவையான அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது என்பதைக் கையாளவும், மேல்சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் அரசியல் தீர்வுக்கான எமது பரிந்துரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
அவ்வாறு அமையப்பெறும் மேல்சபையில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் 50க்கு 50ஆக இருப்பதும் அவசியமாகும். இல்லாவிட்டால், நாடாளுமன்றத்தில் இருப்பதைப்போல், மேல்சபையிலும் சிறுபான்மையினரின்; பிரதிநிதித்துவம் பலமான பங்களிப்பைச் செய்யமுடியாது போகும் என்பதையும் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.
மாகாணசபை முறைமையானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுமாக இருந்தால், அதைக் கட்டங்கட்டமாக அரசியல் தீர்வு நோக்கி நகர்த்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை வரவேற்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
13ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே எமது நாட்டின் சட்ட திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மைச் சிங்கள மக்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகையால் அதன் மீது அவர்களுக்கு தெளிவும், நம்பிக்கையும் இருக்கின்றது. முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கோ, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை என்பதாகும்.
மாகாணசபை முறைமையில் நாம் சுட்டிக்காட்ட முற்படுவது என்னவென்றால், மாகாணத்திற்குள் இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் வைத்திருப்பதானது, அந்த மாகாண மக்களின் உணர்வுகளை மலினப்படுத்துவதாகும். உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கே இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், மத்திக்கும், மாகாணத்திற்குமான இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ளும் சில அதிகாரிகள் பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலைமையும் காட்டிக்கொள்வதுபோல் செயற்படுவார்கள். இரட்டை வழித் தடத்தில் பயணம் செய்யும் உள்ளுராட்சி மன்றங்களினால் மக்களுக்கு பிரயோசனம் இருக்காது.
எனவே மாகாணசபைகள் தொடர்பான திருத்த வரைபில், தேர்தல் நடத்தும் முறைமை, அதில் பெண்களுக்கு 30 வீதப் பிரதிநிதித்துவம், என்பவற்றோடு, உள்ளுராட்சி மன்றங்களை மாகாணசபைகள் கட்டுப்படுத்தும் திட்டத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
Related posts:
|
|