மக்களின் அவலங்களுக்கு தவறான அரசியல் தலைமைகளே காரணம் – கிளிநொச்சியில் டக்ளஸ் தேவாந்தா

Saturday, April 9th, 2016

காணிக்கச்சேரி ஊடாக காணி உரிமங்களைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு நாம் என்றும் உறுதியுடன் இருக்கின்றோமெனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் அரசுகளின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் ஏற்பட்ட பின்விளைவுகளால் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தம் அதன் பின்னரான இழப்புகள் மற்றும் பாதிப்புகளை எமது மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டது.

47

1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் வரையான உயிரிழப்புகளையும் உயிர் உடமை இழப்புகளையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். மாறாக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாததன் விளைவை எமது மக்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது.

இவ்வாறானதொரு அவலம் ஏற்படப்போகின்றது என்று நாம் தீர்க்கதரிசனமாகக் கூறிய போது அதனை எள்ளிநகையாடியவர்கள் எம்மை துரோகிகளாகவும் விரோதிகளாகவும் கூறிவந்தனர். அதனடிப்படையிலேயே என்மீதும் நான்சார்ந்த கட்சி மீதும் திட்டமிட்ட வகையில் அவதூறானதும் பொய்யானதுமான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி எம்மீதான அரசியல் பயம் காரணமாகவும் காழ்ப்புணர்வு காரணமாகவும் தவறான அரசியல் தலைமைகள் இன்றும் மக்களை தவறாகவே வழிநடத்திச் செல்கின்றமை வருத்தத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் யுத்தத்தினால் ஏற்பட்ட உயிர் உடமை இழப்புகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் தீர்வு காணும் பொருட்டு கடந்த அரசுகளில் நாம் பங்கெடுத்திருந்த காலப்பகுதியில் எமது இணக்க அரசியல் செயற்பாட்டின் ஊடாக மக்களது வாழ்வாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகப் பல்வேறு வகையிலான திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தியும் நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளோம்.

இங்கு மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டிய அவசியமானதும் அவசரமானதுமான பிரச்சினைகள் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனாலும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணக்கூடிய வடக்கு மாகாண சபை அவதானம் செலுத்தாமல் இருக்கின்றமை ஆச்சரியமளிக்கின்றது என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

DSC04082

வடக்கு மாகாண சபையை நாம் கைப்பற்றியிருப்போமேயானால் கிளிநொச்சி மாவட்டம் மட்டுமல்லாது மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களையும் மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள் வளமானதொரு தேசமாகக் கட்டியெழுப்பிருப்போம். ஆனால் துரதிஷ்டவசமாக அது எங்கள் கைகளில் கிடைக்காமல் போனது. ஆனால் இன்று மாகாண சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தவறாகத் தெரிவு செய்ததன் பயனை தாம் அனுபவிப்பதாகவும் இங்கு எடுத்துரைத்துள்ளனர்.

எம்மைப் பொறுத்தவரையில் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுவும் யுத்தத்தால் அழிவடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி அபிவிருத்தியால் கட்டியெழுப்புவது எமது கட்சியின் நோக்கம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts:

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
மக்களுக்கான உன்னத சேவைகளை வழங்கவே நாம் விரும்புகின்றோம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !
பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் - மாண...