பூநகரி வலைப்பாட்டு மக்கள் கடற்பாசி வளர்பை விரிவாக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் – துறைசார் அதிகாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Monday, May 20th, 2024

பூநகரி வலைப்பாட்டு பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் கடற்பாசி வளர்பை மேலும் விரிவாக்கம் செய்யவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (20.05.2024) நடைபெற்றது.

இதன்போது கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பூநகரி வலைப்பாட்டு பிரதேச மக்கள் தமது தொழில் நடவடிக்கையை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு சட்டரீதியான அனுமதிகளை ஏற்படுத்தி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அமைச்சருடனான சந்திப்பில் குறித்த பகுதி மக்கள் மேலும் கூறுகையில் – தமது பிரதேசத்தில் சுமார் 300 இற்கும் அதிகமானவர்கள் கடற்பாசி வளர்ப்பில் அக்கறை செலுத்தி வருவதுடன் தற்போது 250 பேர்வரை அதை சிறிய அளவில் முன்னெடுத்து வருகின்றனர்.

இதை மேலும் அதிகரித்து தமக்கான ஒரு பிரதான பொருளாதாரத்தை ஈட்டும் தொழில் நடவடிக்கையாக மாற்றுவதற்கு தாம் பல முயற்சிகளை எடுத்துவருவதால் தமக்கு பாசி வளர்ப்பை மேற்கொள்வதற்கான இடவமைவும் அதற்கான சட்டபூர்வமான அனுமதியும் அவசியமாக உள்ளது.

அத்துடன் எமது முயற்சியை ஊக்குவிப்பதற்கும் அத்தொழில் நடவடிக்கைக்காக வங்கிகளில் கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றவகையில் கடற்பாசி வளர்ப்பை மேற்கொள்வதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை ஏற்படுத்தி தாருங்கள் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கையின் நியாயங்களை கவனத்திற்கொண்ட அமைச்சர் அதுகுறித்து துறைசார் அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்ததுடன் குறித்த முயற்சியாளர்கள் கடற்பாசி வளர்ப்பை முன்னெடுப்பதற்கான சட்டரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் ஏற்படுத்தி கொடுக்குமாறும் பணித்திருந்தார்.

இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்படும் கடல்பாசி மற்றும் கடலட்டை பண்ணை போன்றவற்றினால் தமக்கு கிடைத்து வருகின்ற நன்மைகளையும் சுட்டிக்காட்டியிருந்த அப்பகுதி மக்கள் அதற்காக அமைச்சருக்கு நன்றியும் தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
தேர்தல் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக்குவோம் - யாழ். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந...