பயணிகளது நலன் கருதி அனைத்து புகையிரத நிலையங்களிலும் தமிழ் மொழியிலும் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016

இலங்கையில் புகையிரத நிலையங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் பெரும்பாலானவை தமிழ்மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த நிலையில், ஒரு புகையிரதம் புறப்படும் நேரம், எங்கு செல்லும் புகையிரதம் எந்த மேடையில் தரித்திருக்கிறது, வெளியிடங்களிலிருந்து குறித்த புகையிரத நிலையத்திற்கு வந்து சேரும் புகையிரதம் எந்தப் புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டது, அது எத்தனையாம் மேடைக்கு என்ன நேரத்திற்கு வரும், தாமதாமாகப் பறப்படும் மற்றும் தாமதமாக வந்தடையும் புகையிரதங்களின் விபரங்கள்  போன்ற விபரங்களை பயணிகளும், பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும் என்றே கருதுகின்றேன்.

இந்த வகையில் பார்க்கும்போது, நாட்டின் பிரதான புகையிரத நிலையமான கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம் முதற் கொண்டு, பல புகையிரத நிலையங்களில் தமிழ்மொழி மூலமான அறிவிப்புகள் போதியளவில் இல்லை என்பதும், பல இடங்களில் அறவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதனால், தமிழ்மொழி மாத்திரம் தெரிந்த பல பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதால், இவ்விடயம் தொடர்பில் கௌரவ போக்குவரத்து அமைச்சர் அவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இதே நேரம், இன்றைய நிலையில் புகையிரதத் திணைக்களத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற வடக்கு மாகாணத்திற்குரிய சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சாதாரண புகையிரதங்களில் மிகவும் பழமையான பெட்டிகளே அதிகமாக இணைக்கப்பட்டுள்ளன. சுத்தம் என்பதையே இதில் காண முடிவதில்லை. நுளம்புத் தொல்லைகளும், மூட்டைப் பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரித்து அவற்றில் பயணம் செய்யவே இயலாதுள்ளதாக பல பயணிகள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர்.

இது குறித்த உடனடியாக ஆராய்ந்து அந்தப் பயணிகளுக்குப் போதுமான வசதிகளை மேற்கொள்வதற்கும்,  இம்முறை வடக்கிற்கான புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், பளையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒரு நகரப் புகையிரத சேவை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், அது தொடர்பில் போதியளவு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், அந்த சேவை பயணிகள் குறைவு காரணமாக இடை நிறுத்தப்பட்டது. எனினும், அச் சேவை நடத்தப்பட்டபோது, அதன் மூலம் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் என்போர் அதிகப் பயனை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த சேவையின் தேவை எமது மக்களிடையே உணரப்பட்டு வருகின்ற நிலையில், அதனை மீள, கிளிநொச்சிக்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் மேற்கொள்ளப்படுவது பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகின்றேன். இவ்வாறான ஒரு சேவை ஏற்கனவே ஆரம்ப காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இது தொடர்பில் ஆராய்ந்துபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கும். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

05

Related posts: