நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த் தரப்பினருக்கும் எதிரானது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, July 11th, 2019

‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்’ என்பார்கள். இங்கே ஆட்சி இரண்டு பட்டிருக்கிறது. இதை கொண்டாடுகின்ற கூத்தாடிகள் யார்? என்று பார்க்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த ஆட்சிக்குள்ளேயே சிலருக்கும், இந்த ஆட்சியைக் கொண்டு வந்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்ற பலருக்கும், எதிர்த் தரப்பு அரசியலில் இருக்கின்ற சிலருக்கும் கோமாளி வேடங்கள் வெகுவாகப் பொருந்துகின்றதாகக் கூறுகின்ற மக்கள், இந்த நாடு அரசியல் கேலிக் கூத்துக்களுடன் முன்னேறிக் கொண்டிருப்பதையே  பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தானே என்று கட்சிக்கு கட்சி, ஆளுக்காள் தம்மைத் தாமே சிபாரிசு செய்து கொண்டிருக்கின்ற நிலையில், மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு தேவைக்கு உதவாத வெவ்வேறு தலைப்புகள் முன்னிறுத்தப்பட்டு, அவை தொடர்பில் விவாதித்துக் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்கு சென்று ஆராய்கின்ற வரையில் அது குறித்து பாதுகாப்புத் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அறிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகின்ற நிலையில், இந்த நாட்டில்; தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நாட்டை எவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நாட்டின் நடைமுறை நிலைமைகளைப் பார்க்கின்றபோது ‘கூத்தாடிகள் யார்? என்பது தொடர்பில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இந்த நாட்டு மக்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.

கூத்தாடிகள் தங்கள் தங்களது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொள்கின்ற ஒரு மேடையாக இந்த நாடு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  எமது நாட்டு மக்கள் இலவச பார்வையாளர்களாக இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், எமது மக்களது உரிமைகள் மேலும், மேலும் உருவப்பட்டு வருவதுடன், அவர்களது அன்றாட வாழ்க்கை பெரும் சுமையாக்கப்பட்டு அவர்களிடமே திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் தேசிய பாதுகாப்புத் தொடக்கம் அனைத்துத் துறை சார்ந்தும் உரிய அவதானங்கள் தொடர்ந்து செலுத்தப்பட்டிருக்குமானால், கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மட்டுமல்லாது, எமது மக்களுக்கு எதிரான அனைத்து நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்களையும் நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும் எனக் கருதுகின்றேன் என்றார்.

Related posts: