நந்திக் கடல் நீரேரி புனரமைக்க ப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள்- டக்ளஸ் தேவானந்தா
Wednesday, August 9th, 2017வறுமை நிலைப்பட்டியலில் இருந்துவரும் 14 மாவட்டங்களில் இரண்டாம் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் இருப்பதாகத் தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற வளங்களை ஒழுங்குற அபிவிருத்தி செய்தால் அம் மாவட்டத்தை வறுமை நிலையிலிருந்து மீட்க முடியும் என்பதை அவதானத்துக்குக் கொண்டு வருகின்ற நிலையில், அதில் ஓர் அபிவிருத்தி நடவடிக்கையாக நந்திக்கடல் நீரேரி புனரமைப்புத் திட்டம் அடங்கியுள்ளது.
சுமார் 3120 ஹெக்டயர் பரப்பளவைக் கொண்ட பாரிய நீரேரியாக விளங்கும் நந்திக்கடல், ஒடுங்கிய 2 கிலே மீற்றர் நீளமான கால்வாய் வழியாக வட்டுவாகல் பகுதியில் கடலுடன் கலக்கிறது. இதனை அண்டியுள்ள சூழலானது புவிசார் உயிரினவியல் முக்கியத்துவம் கொண்டதாக அமையப் பெற்றுள்ளதுடன், அயல் பகுதிகளில் வாழும் மக்களுக்கு புவிசார் உயிரினவியல் சேவைகளை வழங்குவதாகவும் உள்ளதுடன், இக் கடலானது நண்டு, இறால் மற்றும் சில மீன் வகைகளைக் கொண்டுள்ளதாகவும் அமைந்துள்ளது. என்று நேற்று (08.08.2017)நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில், மேற்படி நந்திக் கடல் நீரேரியில் தற்போது, பாரியளவில் கழிவுப் பொருட்கள் புதைந்து, படிந்துக் கிடப்பதாலும், மழை காலத்தில் மேலும் வண்டல் மண் சேர்ந்தும் இதனது ஆழம் குறைந்துள்ளதுடன், கடலினுள் ஏரியின் நீர் கலக்குமிடத்திலுள்ள பாலத்தடியில் படிவுகள் அதிகம் படிந்து நீரோட்டத்தினைத் தடுத்தும் வருகின்றன. இதனால் மேற்படி ஏரியில் மீனினங்களின் உற்பத்திப் பெருக்கமானது வெகுவாகக் குறைந்துள்ளது. அத்துடன், மேற்படி பாதிப்புகள் காரணமாக கால நிலை மாற்றங்களின்போது மீனினங்கள் பாரிய அளவில் உயிரிழக்கின்ற நிலைமைகளையும் அண்மைக் காலத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இதன் காரணமாக நந்திக் கடல் நீரேரியின் மூலமாக நேரடி பயன்களைப் பெறுகின்ற சுமார் 10 ஆயிரம் மக்களும், மறைமுகமான பயன்களைப் பெறுகின்ற சுமார் 5 ஆயிரம் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரங்களுக்காக நிவாரணங்களைக் கோருகின்ற நிலை சுமார் இரண்டு வருட காலமாக ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்படி நந்திக்கடல் நீரேரியை புனரமைப்புச் செய்தால் அதன் மூலமாக தற்போது தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்கின்ற மக்கள் மட்டுமின்றி, மேலும் பலருக்கு வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள முடியும்.
அந்த வகையில், நந்திக்கடல் நீரேரி தொடர்பில் துறைசார் நிபுணத்துவம் கொண்ட தரப்பினரைக் கொண்டு அளவை மதிப்பீடு செய்து, அதனது இயல்பான நீரோட்டத்தினை உறுதி செய்யும் வகையிலும், கடற்றொழில் வள்ளங்களின் பாதுகாப்பான நகர்வுகளுக்கு வசதி செய்தும், சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், கடல் வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் அதனை புனரமைப்பு செய்து உதவ முடியுமா? என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் கேள்வியை முன் வைப்பதாகவும் கூறினார்.
Related posts:
ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப...
கோயிலாக்கண்டி - துறையூரில் இறால் வளர்ப்பு திட்டம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்...
அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை - பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்ற...
|
|
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் டக்ளஸ் தே...
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை, புதுகுளம் மகா வித்தியாலய மெய்வல்லுநர் போட்டிகளில் அமைச்சர் ...
இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவா...