தமிழர் தேச விடியலுக்கு வரலாறு எமக்களித்த வரமானவர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா!….

Friday, November 10th, 2017

வரலாறு தலைவர்களை உருவாக்குகின்றது. தலைவர்கள்  வரலாற்றை படைக்கின்றார்கள்.

இன்று கார்த்திகை பத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அகவை அறுபதில் கால் பதிக்கின்றார்.

வந்த மழையில் வடிந்தோடிய வெள்ளத்தில் அள்ளுப்பட்டு மிதந்து வந்த வெறும் விறகுக்கட்டை அல்ல அவர்.

தமிழ் பேசும் மக்களின் விடுதலை பயணத்தில் ஆழ வேரூன்றி நீள நிமிர்ந்து நிற்கும் ஓர் பெரு விருட்சம் அவர்.

விடுதலை பயணத்தில் வெறும் உணர்ச்சி வேகத்தில் உந்தப்பட்டு இணைந்தவரும் அவரல்ல..

அறிவார்ந்த சிந்தனைத் தெளிவோடு சமூக மாற்றத்தையும் தமிழர்களின் தேசவிடுதலையையும் கனவாக கொண்டு கருக்கட்டிய ஓர் காலச்சூரியன் தோழர் டக்ளஸ் தேவானந்தா.

தோழர் தேவாவின் தந்தையார் திரு கதிரவேலு அவர்கள் இலங்கை கம்யுனிஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர். ஐம்பதாம் ஆண்டுகளின் ஆரம்பங்களில்  திரு கதிரவேலு அவர்கள் சிவப்பு நாடா என்ற கம்யுனிஸ் கட்சியின் பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்தவர்.

தோழர் தேவாவின் பெரிய தந்தையும் வளர்ப்பு தந்தையுமாகிய கே.சி நித்தியானந்தா அவர்கள் ஒரு இடது சாரி சிந்தனையாளர். புகழ் பூத்த மாபெரும் தொழிற்சங்கவாதி.

தோழர் தேவாவின் தாய்வழி மாமனார் தோழர் சிவதாசன் அவர்கள் இலங்கை கம்யுனிஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்.

இந்த வரலாற்று பின்னணியின் சிந்தனை தாக்கங்களே இன்று டக்ளஸ் தேவானந்தா என்று அறியப்படும் தோழர் தேவாவின் சிந்தனையில் மக்கள் புரட்சி குறித்த கனவுகள் பற்றிக்கொண்டன.

மீசையே அரும்பாத சிறு வயதில் தேவா என்ற அந்த இளம் வாலிபனின் ஆழ்மனதில் தமிழர்களின் விடியல் குறித்த கனவுகள் அரும்பின.

தமிழ் மாணவர்களுக்கு எதிரான இனரீதியான தரப்படுத்தல்,. மற்றும் 1974  இல் நடந்த தமிழாராட்சி மாநாட்டு படுகொலைகள் தோழர் தேவாவின் மக்கள் புரட்சி குறித்த கனவுகளுக்கு மேலும் நெய்யூற்றி தீ மூட்டியது.

மாணவர் பேரவை,.. ஈழவிடுதை இயக்கம். என்று தொடக்கி தோழர் இரட்னசபாபதி அவர்களால் உருவாக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் இயக்கம் வரை,…தோழர் தேவா அவர்களை முக்கிய பங்கெடுக்க வைத்தது.

ஈரோஸ் அமைப்பின் தளப்பொறுப்பு ,. அதன் மாணவர் அமைப்பான ஈழ மாணவர் பொது மன்றத்தில் (கெஸ்) பொறுப்பு,..

இவை இரண்டும் தோழர் தேவா அவர்களின் ஆற்றல் உணர்ந்து  அவருக்கே வழங்கப்பட்டது.

கராத்தே கலையில் கறுப்பு பட்டி எடுத்த தோழர் தேவா கொழும்பில் கராத்தே வகுப்பு என்ற உருமறைப்பில் பேரினவாத சிங்களத்தின் கோட்டைக்குள்  இருந்துகொண்டே ஈழப்போராட்ட களம் நோக்கி இளைஞர்களை அணி திரட்டினார்.

1977 இல் தமிழர்கள் இன சங்காரம் செய்யப்பட்டனர். தோழர் தேவாவின் பெரிய தந்தை கே.சி நித்தியானந்தா அவர்களால் உருவாக்கப்பட்டதே தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக்கழகம். அதில் முதன்மை உறுப்பினரானார் தோழர் தேவா.

கொல்லப்பட்ட தமிழர்கள் தவிர எஞ்சிய தமிழர்களை பாதுகாத்து  வடக்கு கிழக்கு நோக்கி அனுப்பி வைத்தார்.

1978 இல் மட்டகளப்பில் பெரும் சூறாவளி. மக்கள் துயர் துடைக்க நிவாரணபொருட்களை சுமந்து சென்று  தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பாக சென்று ஆபத்து காத்தார்
தோழர் தேவா.

1978 இல் ஆயுதப் பயிற்சிக்காக தளத்தில் இருந்து தமிழர்களின் ஈழ தேச கனவோடு பாலஸ்தீனம் சென்றார்.

ஈரோஸ் இயக்கத்தில் தத்துவ நடைமுறை  முரண்பாடுகள் உருவாகின்றன. ஈரோஸ் அமைப்பில் இருந்து பிரிந்து வந்து தோழர் பத்மநாபா அவர்களுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை உருவாக்கினார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவராக. அதன் மத்திய குழு உறுப்பினராக. உயர் அரசியல் பீட உறுப்பினராக,. அதன் இராணுவ அமைப்பான மக்கள் விடுதலை படையின் பிரதம தளபதியாக,.. வழி நடத்துனராக உழைத்தார்.

தம்மை நம்பி வந்த போராளிகளுக்கு தோழர் நாபாவும் தோழர் தேவாவும் தமிழ் நாட்டின் மருத்துவமனை இரத்த வங்கிகளில் தமது இரத்தத்தை விற்றுக்கூட உணவு பரிமாறினார்கள்.

இது உலகப்போராட்ட வரலாற்றில் எங்கும் நடந்திராத அர்ப்பண உணர்வு. அன்றைய பேரினவாத அரசுக்கு எதிராக தோழர் தேவா தளபதியாக நின்று படையணி நடத்தினார்.

இளமையை அனுபவிக்கவோ தாடியை வழிக்கவோ தன்னை அழகு படுத்தவோ அவருக்கு நேரமிருக்கவில்லை. ஆனாலும் அவர் நெஞ்சில் சுமந்த புரட்சி குறித்த கனவுகளே அவருக்கு ஒரு பேரழகை கொடுத்தது.

தான் நேசித்த மக்களுக்காக சிறை சென்றார்,. பனாகொடை, வெலிக்கடை சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தார்.

1983 இல் வெலிக்கடை படுகொலைகள் அரங்கேறின. அப்போது அங்கு சிறையிருந்த தோழர் தேவா இனவெறி குண்டர்களை எதிர்த்து துணிச்சலோடு போராடி உயிர் தப்பினார். சக கைதிகையும் காப்பாற்றினார்.

அங்கிருந்து மட்டு நகர் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறைக்குள் இருந்தே திட்டமிட்டு மட்டுநகர் சிறையுடைத்து சக அரசியல் கைதிகளோடு தப்பித்து  வந்தார். மறுபடி ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை புது உத்வேகத்துடன் வழிநடத்தினார்.

1984 இல் இரண்டாம் கட்ட ஆயுதப்பயிற்சிக்காக பெண்கள் அடங்கிய இயக்க தோழர்களை பாலஸ்தீனம் அழைத்து சென்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புக்குள் உள் முரண்பாடுகள் வெடித்தன. ஆனாலும் ஏனைய அமைப்புகள் போல் முரண்பாடுகளை துப்பாக்கி மூலம் தீர்க்காமல் பேசி தீர்ப்பதில் தோழர் தேவா கரிசனை காட்டினார்.

ஆனாலும்,.. உடைத்தது ஈ,[பி.ஆர்.எல்.எவ். அமைப்பு. நாபா அணி, தேவா அணி என்று  இரு வேறாக இயங்க தொடங்கியது.

பின்னர்,. 1987 இல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய ஈ.பி.டிபி என்ற மக்கள் அமைப்பை தோழர்களுடன் இணைந்து உருவாக்கினார் தோழர் தேவா.

உருவாகியது இலங்கை இந்திய ஒப்பந்தம். அப்போது தோழர் தேவாவும் ஈ.பி.டி,பி தோழர்களும் இந்தியாவில் இருந்தனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தோடு தனது உரிமை போராட்ட வழிமுறையை  மாற்றினார்.

தொலை தூர நோக்கோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தோழர் தேவா ஏற்றுக்கொண்டாலும்,.  அதன் நடைமுறையில் அவர் பங்கெடுத்திருக்கவில்லை. அவர் அதில் பங்கெடுப்பதற்கான உரிமை கூட மறுக்கப்பட்டது.

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேறியது. 1990 களின் நடுப்பகுதியில் தோழர் தேவா தாயகம் திரும்பினார்.

ஆளப்பெருங்கடலில் தத்தளித்த தமிழ் மக்களை கரைசேர்க்கும் கப்பலாக ஈ,பி,டிபி. யும், அதன் மாலுமியாக தோழர் தேவாவும் களமிறங்கினார்கள்.

தமிழர் தேசமெங்கும் இருந்து உயிர்காக்க ஓடிவந்தோரை கொழும்பில் இடைத்தங்கல் முகாம்கள் அமைத்து பாதுகாத்தார்.

யாழ் தீவக மண் படையிரால் கைப்பற்றபட்டபோது திக்கற்றது நின்ற தீவக மக்களை காப்பாற்ற தீவகத்தில் தோழர் தேவா கட்சி தோழர்கள் சகிதம் கால் பதித்தார்.

உணவின்றி பட்டினிச்சாவில் வதைபட்ட மக்களின் பசி போக்க தன் தோள்களில் உணவு மூடைகளை சுமந்து சென்ற ஒரேயொரு தமிழ் தலைவன் டக்ளஸ் தேவானந்தா  என்றால் அது மிகையாகாது.

ஊரடங்கு சட்டங்களை நீக்க,.. மீன் பிடி தடைகளை நீக்க,..சீர் குலைந்திருந்த அரச நிர்வாகங்களை இயக்க,… அச்சத்தில் உறைந்து கிடந்த மக்களை சுதந்திரமாக நடமாட வைக்க தோழர் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சிகளில் வெற்றி கண்டார்.

அன்றாட அவலங்களுக்கான தீர்வு!,, அபிவிருத்தி!!..அரசியல் தீர்வு!!! மூன்றும் சேர்ந்ததே கட்சியின் கொள்கை என வகுத்தார்.

1994  ஒன்பது ஆசனங்களுடன் நாடளுமன்றம் சென்றார், 1996 இல் யாழ் குடாநாட்டை படையினர் கைப்பற்றினர், அவலப்பட்டு நின்ற மக்களை காக்க சந்திரிகா அரசுடன் வாதாடி யாழ் குடாநாட்டில் கால் பதித்தார்.

காணாமல் போனோர் சங்கம் அமைத்து போராட்டங்கள் நடத்தினார். சர்வதேச அளவில் அதை அம்பலப்படுத்தினார். அதன் மூலம் காணாமல் போதல்களை இயன்றளவு கட்டுப்படுத்தினார். யாழில் கிருசாந்தி,. புங்குடுதீவில் சாரதாம்பாள்,. கிழக்கில் கோணேஸ்வரி என பாலியல் வதை செய்து கொல்லப்பட்டவர்களின் விடயங்களுக்காக குரல் கொடுத்தார். அம்பலப்படுத்தினார்.

மிருசுவில் படுகொலையை கண்ணால் கண்ட சாட்சியாகிய பொது மகனுக்கு பாதுகாப்பு அளித்து நீதிமன்றம் அழைத்து சென்று சம்பவத்தில் ஈடுபட்ட படையினருக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்.

தமிழர்களுக்கு எதிரான வலிகாமம் காணி சுவீகரிப்பு,. தமிழர்களை மேலும் சிறுபான்மையினராக்கும் குடிசன மதிப்பீடு,…போன்றவைகளை தடுத்து நிறுத்தினார்.

போக்குவரத்து, வீதி புனரமைப்பு, மின்சாரம், சுகாதாரம், குடிநீர். கல்வி, மற்றும் தமிழர் தேச உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் முடிந்தளவு நிறைவேற்றினார்.

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம், வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு,. மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு என பல்லாயிரம் பேர்களின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றினார்.

எக்காலமும் எந்த அரசியல் கட்சிகளினதும் கால்கள் படாத கிராமங்கள் தோறும் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் கால்கள் நடந்தன, அவரது கரங்கள் நீண்டன.

முன்பள்ளிகள், பொது நோக்கு மண்டபங்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என நிதிப்பங்களிப்பை அள்ளி வழங்கினார்,

வறுமைப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற சமுர்த்தி திட்டத்தை வடக்கு நோக்கி கொண்டு வந்து அறிமிகப்படுத்தினார்,

பிரதேச செயலகங்கள், தபால் நிலையங்கள் என கட்டி எழுப்பினார். இடம்பெயர்ந்த முஸ்லிம் சகோதர மக்களை புத்தளத்தில் கிராமம் அமைத்து குடியேற்றினார். அதற்கு தேவா பாத் என்று மக்கள் பெயரிட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் தரணிக்குளம் மறவன்குளம், சுந்தரபுரம் ஆகிய குடியிருப்புகளை நிறுவி அங்கு அவலப்பட்ட வாழ்ந்த மக்களுக்கு ஒளியேற்றிக் கொடுத்தார்.

திருமலையில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை பாதுகாக்க தேவாநகர், நித்தியபுரி, வரோதயநகர்,புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரி,பாலையூற்று (பூம்புகார் கிழக்கு), லிங்கநகர், உதயபுரி,என எட்டுக்  குடியேற்ற கிராமங்களை உருவாக்கி தமிழர்களை குடியேற்றினார்.

யுத்தம் நடத்திய அரசுகளுடன் பேசி யுத்தகாலத்திலேயே தமிழ் அரசியல் கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்க உதவினார்,. அவர்களில் பல நூற்றுக்கணக்கானவர்களை  சிறை மீட்டார்,. அவர்களை தன்னுடன் பாதுகாப்பாக தங்க வைத்து கப்பல்கள் மூலம் ஏற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.

யுத்த காலத்தில் யாழ் மற்றும் வன்னி மக்களுக்கான உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்தார்.

தரை வழி, மற்றும் கடல் வழி உணவு விநியோகம் யாவும் தடைப்பட்ட ஒரு சூழலில் இந்தியாவில் இருந்து கூட கப்பல் மூலம் உணவு வரவழைத்து யாழ் குடாநாட்டின் பட்டினி சாவை தடுத்து நிறுத்தினார்.

கடந்த அரசு காலத்தில், 12 500  முன்னாள் புலிகள் இயக்க  போராளிகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.

வடக்கில் 17 522 ஏக்கர் மக்களின் நிலங்களை படையினரிடம் இருந்து மக்களுக்கு மீட்டு கொடுத்தார், மீள் குடியேற்றம் செய்து கொடுத்தார்.

கிளிநொச்சியில் படை முகாமாக இருந்த 600 ஏக்கர் விலாசம் கொண்ட அறிவியல் நகரை மீட்டு அங்கு யாழ் பல்கலையின் பொறியியல் பீடத்தையும். விவசாய பீடத்தையும் உருவாக்கி கொடுத்தார்.

அதுமட்டுமல்லாது தனது அதிகார காலத்தில் வடக்கின் கல்வி தரத்தை வீழ்ச்சிகாண விடாது பாதகாத்துவந்தவர். ஆனால் இன்று அது தலைகீழாக மாறிவிட்டது.

நேரில் சென்று இந்திய அரசுடன் பேசி ஐம்பதாயிரம் வீட்டுத்திட்டத்தை உருவாக்கினார். மதவாச்சியில் இருந்து மன்னர் நோக்கியும். வவுனியாவில் இருந்து யாழ் நோக்கியும் புகையிரத சேவையை மீள  ஆரம்பித்தார்.

யாழ் நகர மத்தியில் கலாசார மண்டபம். கைதடி பனை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை உருவாக்கினார். அதுபோல் அவரால் மீள இயங்க வைக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அவர் அதிகாரத்தில் இல்லாத காரணத்தால் செயலிழந்து தூங்கி கிடக்கிறது.

தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் என்பதை அடையாளப்படுத்த சிதைந்து கிடந்த சங்கிலியன் சிலையை புதுப்பித்தார்.

எல்லாளன் பெயரை சொன்னாலே அச்சப்படும் ஒரு சூழலில் யாழ் நகர மத்தியில் தமிழ் ஆண்ட மன்னவர்களான எல்லாளன், பண்டாரவன்னியன், பரராசசேகரன் என முச்சிலைகளை நிறுவினார்.

பண்ணை சந்தி வளைவில் தமிழ் மணக்க வரவேற்கும் தமிழ் நங்கை சிலையும். தமிழரின் உரிமை போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பொன் சிவாகுமாரனுக்கு  உரும்பிராயில் வெண்கல சிலையும் யாழ் மடத்தடியில் தவத்திரு தனினாயகம் அடிகளாருக்கு உருவச்சிலையும் எழுந்து நிற்கிறன..

இவைகள் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தமிழ் தேசிய உணர்வின் அடையாளங்களே…

தமிழ் தேசியத்தை வெறும் தேர்தல் கோசமாக உரைப்பதையே அவர் என்றும் வெறுப்பவர்.

குளிர் நாடுகளுக்கு சென்றால் என்ன ஐ.நா சபைக்கு சென்றால் என்ன தமிழர்களின் தேசிய அடையாளத்தை பேணும் வகையில் தமிழ் தேசிய உடை அணிந்து செல்லும் ஒரேயொரு தமிழ் தலைவர்  தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே.

தமிழ் பேசும் மக்களின் இலட்சிய வேட்கையான அரசியல் தீர்வு விடயத்தில், ஓரளவு அரசியல் பலத்துடன் இருந்த சந்திரிகா  ஆட்சி காலத்தில் இது வரை எவராலும் வழங்கப்படாத மிகச்சிறந்த தீர்வை கொண்டுவர காரணமாக இருந்தார்.

ஆனாலும் அந்த தீர்வை சக தமிழ் தலைமைகளே நடைமுறைக்கு வராது தடுத்த வரலாற்று தவறு, ஒரு சாபக்கேடு.

ஆனாலும் தோழர் டக்ளஸ் தேவாந்தா அவர்கள் முயற்சி தளரவில்லை.

13 திருத்தச்சட்டத்தில் இருந்து தொடக்கி அதை பலப்படுத்திஇறுதி இலக்கை எட்ட முடியும் என துணிச்சலோடு தூர நோக்கோடு வலியுறுத்தி வருபவர். இதுவே இன்று மெய்யாகியும் வருகிறது.

தன்னிடம் அரசியல் பலமிருந்தால் தமிழரின் தலைதியையே தன்னால் மாற்றி எழுத முடியும் என்று அவர் கூறுவது வெறும் பொய்யல்ல. இதற்கு அவரது ஆற்றல்  ஒன்றே சாட்சி.

ஆற்றல், ஆளுமை,. அக்கறை, அனுபவம், தற்தணிவு என ஐந்தும் தன்னகத்தே கொண்ட ஒரு பன்முக சிந்தனையாளன்.

ஆகவேதான் தமக்கு கிடைத்த சொற்பமான அரசியல் பலத்தை வைத்தே இத்தனை மக்கள் பணிகளையும் ஆற்றி முடித்தவர்.

13 வது திருத்தசட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்த கோரி அதில் வெற்றி கண்டார், ஆனாலும் அதை சரிவரப்பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் தவறி விட்டார்கள். இது அவரது ஆழ்மன துயரம்.

கடந்த ஆட்சியில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்க எத்தனித்த போது தனது தேசிய நல்லிணக்க முயற்சியால் அதை தடுத்து நிறுத்தினார்.

காலம் ஒரு செங்கோலை அவரிடம் கையளித்தால் மக்களின் கனவும் அவரது கனவும் நிச்சயம் நிறைவேறும். இது உறுதி.

எளிமையானவர்,. தோழமைக்கு அர்த்தமானவர், எவருடனும் சகசமாக பழகுபவர்,

இன்று வரை பஞ்சணை  மெத்தையை தன் படுக்கை விரிப்பாக விரும்பாத அவர், வெறும் பலகை மேசை மீதே படுத்துறங்கும் ஒரேயொரு தலைவர்.

நான்கு மணி நேரம் மட்டும் உறங்கி இருபது மணிநேரங்கள் மக்களுக்காக உழைக்கும் ஓர் உற்சாக நதியின் ஊற்று அவர்.

பல முறை மரணத்தை எதிர் கொண்டவர், உலகத்தலைவர்கள் வரிசையில் பிடல் காஸ்ட்ரோ விற்கு நிகராக மரணங்களில் இருந்து மறு பிறப்பெடுத்தவர். தற்கொலை தாக்குதலில் இருந்துகூட பல முறை தப்பித்தவர்.

தன்னை  கொல்ல வந்தவர்களை கூட தண்டிக்க விரும்பாமல் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என விரும்பும் மனித நேய தலைவர்.

அவர் தேர்தலில் என்றும் தோற்றதில்லை. இதுவரை கால இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களின் வரலாற்றில், தொடர்ச்சியாக ஆறு தடவைகள் மக்களால் தெரிவு செயப்பட்டு வரும் ஒரேயொரு தமிழ் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே.

ஆகவேதான் அவரது உயர்வு கண்டு சகிக்க முடியாதவர்கள் அவதூறுகளை அவர் மீது அள்ளி வீச முனைகின்றனர்.

முட்களை வீசினானாலும் அவைகள் பூக்களாகவே அவர் மீது வந்து விழுவதே உண்மை. அவர் கூறும் இணக்க அரசியல் ஒருபோதும் சரணாகதி அரசியல்  அல்ல,. அது மதிநுட்ப சிந்தனை வழிமுறை.

அதன் வெற்றிக்கு தேவை அரசியல் பலம். அதை மக்கள் அவரிடம்  வழங்கும் காலம் கனிந்து விட்டது.

அதிகாரத்தில் இருக்கும் தருணங்களில் செயலில் ஆற்றி காட்டியவர்.இன்று குரல் மூலம் தான் நேசிக்கும் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். இன்றைய சமகாலத்தில்  நாடாளுமன்றத்தில் உணவு முதற்கொண்டு உரிமை வரை குரல் எழுப்பும் தமிழ் பேசும் மக்களின்  உரிமைக்குரலுக்கு அகவை அறுபது.

ஆனாலும் தன் பிறந்தநாளையே அவர் கொண்டாட விரும்பாதவர். அவரது பிறந்தநாளில் மரணித்த தோழர்களையும் அனைத்து போராளிகளையும் பொது மக்களையும் நினைவு கூர்ந்து அவர்களின் கனவுகளை வெல்ல எழுவோம்.

காலம் மாறலாம், களம் மாறலாம்,
களமாடி, நிலமாடி நின்றாடி
நெஞ்சில் சுமந்த கனவு இன்னும் மாறா
காலச்சூரியனுக்கு வாழ்த்துப்பூக்கள்…

Poster 02

– செவ்வந்தி

Related posts:

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மற்றும் நீடித்த தேவைகளை கருத்திற் கொண்டு துரித நட...
கல்முனை கடற் பரப்பில் எண்ணெய்க் கசிவு? - உடனடியாக ஆய்வு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்.
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக...