மெய்கள் ஓங்கவும், பொய்கள் நீங்கவும் தைப்பொங்கல் திருநாள் பிறக்கட்டும் – தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, January 13th, 2025


அறம் சார்ந்த மெய்களும் கைகளும் ஓங்கி மங்கல மகிழ்ச்சி எங்கும் பொங்கவும், பொய்கள் நீங்கி துயர்கள் யாவும் தூர விலகவும் ஒரு நம்பிக்கை திருநாளாக தைப்பொங்கல் பெருநாள் பிறக்கட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்ததா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்து செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –
தைப்பொங்கல் திருநாள் தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளங்களை பறைசாற்றும் பண்டிகைப் பெருநாள்.
தமது வாழ்வும் வளமும் செழித்தோங்க உதவிடும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் சூரியப்பொங்கல் நாள்.
பழையன கழித்தல், புதியன புகுதல் என மாற்றத்தை விரும்பி தைபொங்கல் திருநாளை கொண்டாடி மகிழும் எமது மக்களின் நம்பிக்கையில் நாமும் பங்கெடுக்கின்றோம்,..
மாற்றம் என்பது சொல்லில் அல்ல, செயலில் மலர வேண்டும்,. மனித குல வரலாறுகள் யாவும் மாற்றங்களை கடந்தே வந்திருக்கிறது,.
மாற்றத்தை உருவாக்க வல்லவர்கள் துயரத்தில் வாடும் மக்களை கைவிட்டு தூர விலகி ஓடிப்போவதில்லை.
மாசற்ற சோதியாய் மலர்ந்த மலர்ச்சுடராய் நேசித்த மக்களுடனேயே என்றும் நாம் நீடித்து வாழ்ந்து வருகிறோம்.
கல்லில் எம்மை கட்டி கடலில் எறிந்த போதெல்லாம் தெப்பமாக மிதந்து வந்து எமது மக்களின் துயர் தீர்த்திருக்கிறோம்,..
தம் வாழ்வெங்கும் ஒளி தந்து வழி காட்டும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டை கொண்ட எம் மக்கள் தம்முடன் கூடவே இருந்து குறை தீர்ப்பவர்களுக்கும் நன்றி செலுத்தும் பண்பாட்டை வளர்க்க வேண்டும்.
புயல்காற்று மோதியாவர்ளுக்கு வயல்க்காற்று வலிக்காது. விலைவாசி உயர்வு விண்ணை தொட்டிருக்கிலாம், எதிர் பார்த்த மாற்றமின்றி மக்களாகிய நீங்கள் ஏமாந்திருக்கலாம்.
ஆனாலும் வரப்போவது வசந்த காலம், புதுப்பொலிவோடு பொங்கி மகிழுங்கள். தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் வளமான வாழ்வுயர வேண்டும்,..வறுமை நீங்கி உழைப்பவர் உரிமைகள் வெல்லப்பட வேண்டும்,..
நியாய விலையில் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும். குறைவிலாது் உயிர்கள் வாழ வேண்டும்.அரசியல் உரிமைகள் பெற்று எம் தமிழ் தேசம் நிமிர வேண்டும்.

எமக்கு இலட்சியம் இவைகளுக்கு உழைப்பதே. மாய மான்கள் அவ்வப்போது வந்து போகும். மாயமான்களை கடந்த காலங்களில் பின் தொடர்ந்து ஓடியதால் நீங்கள் பட்ட வலிகளும் வதைகளும் நீங்களே அறிவீர்கள்.
யாரும் கேள்விகளை எழுப்பலாம். குழப்பங்களை விளைவிக்கலாம். ஆனாலும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வு காணும் பொறி முறைகளோ வழிமுறைகளோ அவர்களிடம் துளியும் இல்லை.
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே. இனிவரும் காலங்களில் மக்களாகிய நீங்கள் எமக்கு வழங்கும் பலத்தில்
நாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என சகரும் நிமிர்ந்தெழுவோம்,..
சூழ்ந்து வரும் துயர்களும் சூட்சிகளும் தூசிகள் என எதிர்கொண்டு சூரியப்பொங்கலை பொங்கி மகிழ்வேம்,.வாழ்த்துக்கள்! என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: