மாகாண அரசின் கீழான அதிகாரத்தை மத்திய அரசு எடுக்க முடியாது -அரசியல் யாப்பின் படி அதிகாரம் மத்திக்கு இல்லை – உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டு!
Monday, August 3rd, 2026
……
மாகாண அரசின் கீழ் இருக்கின்ற பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற பெயரில் மத்திய அரசு தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முடியாது என்றும் அரசியல் யாப்பின் படி அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிகாட்டி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாகாண அதிகாரம் பறிக்கப்பட்டு தேசிய பாடசாலையாக்கப்படுவதுதொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனால் கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்நிலையில் யாழ் ஊடக அமையத்தில் இவ்விடையம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் பாடசாலைகள் மாகாண சபைகளுக்கு உரித்தானவை.
ஆனால் தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் யுத்தம் நாட்டில் நடைபெற்றிருந்த காலத்தில் நாடு முழுவதும் 350 பாடசாலைகளை மத்திய அரசாங்கம் தனது கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவந்திருந்தது.
இவற்றில் கிட்டத்தட்ட 20 பாடசாலைகள் வடக்கிலிருந்தும் உள்வாங்கப்பட்டிருந்தன.
அதன் பின் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராக சிறிதுகாலம் இருந்த டளஸ் அளகப்பெருமவினால் 1000 தேசிய பாடசாலைகள் என்ற திட்டத்தின் கீழ் மேலும் 650 பாடசாலைகளை மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்றன.
ஆனாலும் அவரது அமைச்சு நீடிக்காத நிலையிலும், அதன் பின் கல்வி அமைச்சர்களாக வந்த ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்த்தன போன்றிர் அதை மேலும் தீவிரமாக முன்னெடுத்தனர்.
அந்த நேரத்தில் தான் இந்த உள்ளீர்ப்பு அரசியல் யாப்புக்கு முரணானது என்றும், அரசியல் யாப்பை மீறும் செயலாகும் என்றும் சட்டவிரோதமானது என்றும் இத்திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இதன் விழைவாக 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் நாட்டிலுள்ள 9 மாகாணங்களுக்கும் குறிப்பாக ஆளுநர்களின் செயலாளர்களுக்கும், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு 1000 தேசிய பாடசாலை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஏற்கனவே உள்வாங்கப்பட்ட 350 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்திலும் தேசிய பாடசாலை என்ற பெயர்ப் பலகையை நீக்குமாறும் அப்பாடசாலையின் நிர்வாகம் தேசிய பாடசாலை என்ற இறப்பர் முத்திரையை மற்றும் கடிதத் தலைப்புக்களை பயன்படுத்தக் கூடாதென்றும் இதை உடன் நடைமுறைக்கு கொண்டுவருமாறும் சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.
இதே நேரம் பெப்ரவரியில் இந்த நடைமுறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமையால் 2024 ஆம் ஆண்டு குறித்த நடைமுறையை முழுமையாக நிறுத்துமாறு நினைவூட்டல் கடிதங்கள் மூலம் மத்திய கல்வி அமைச்சின் செயலாளரால் குறித்த அதிகாரிகள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டும் இருந்தது.
இதனூடாக அன்று நிர்வாக நீதியாக அதன் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டன. ஆனல் நீதிமன்றினூடாக இது வெளிப்படுத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இன்னிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிற்ரர் ஜெனரல் நீதிமன்றுக்கு முன்னிலையாகி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமக்கு சட்டத்தில் இடம் இல்லை என்ற சமர்ப்பணத்தை முன்வைத்திருந்தார்.
இந்த சமர்ப்பணம் நீதிமன்றின் முன்வைக்கப்பட்டவுடன் இரு நீதிபதிகளை கொண்ட அந்த அமர்வில் வழக்கை வாபஸ் பெறுமாறு கேட்டிருந்தார்கள்.
இதற்கான பதிலை வழக்காளர் தரப்பு முன்வைப்பதற்கு சிறிது கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த அந்த இடைவெளிக்குள், இன்றைய மத்திய கல்வி அமைச்சர் ஹருணி அமரசூரிய 1000 பாடசாலைகளுள் உள்வாங்கப்பட்ட எந்தப் பாடசாலையும் மாகாணங்களுக்கு மீளக் கொடுக்கும் சந்தர்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
உள்வாங்க சட்டம் இல்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் கூறியிருந்த நிலையில் பிரதமர் இவ்வாறு கொடுக்க முடியாது என கூறியது முரண்பட்டதாக இருந்தமைதால் அசரது உரை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கல்வி அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக நிதிமன்றுக்கு கொடுத்த பதிலில் ஏற்கனவே உள்வாங்கப்பட்ட 350 பாடசாலைகளை தவிர ஏனைய 650 படசாலைகளை எடுக்கும் உத்தேசம் தமக்கு இல்லை என இருந்தது.
இதனூடாக ஏற்கனவே மத்திய அரசால் உள்வாங்கப்பட்ட பாடசாலைகளும் சட்டவிரோதமாக அரசியல் யாப்புக்கு முரணாக எடுக்கப்பட்டுள்ளது என்பது புலனாகியுள்ளது.
ஆனால் நாம் தொடுத்த வழக்கு குறித்த 650 பாடசாலைகளை மையமாக கொண்டமைந்ததால் அதற்கான தீர்ப்பாகவே இது அமைகின்றது.
அதுமட்டுமல்லாது தேவைப்பட்டால் இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் இந்த வழக்கு நிறைவுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில் நாம் மற்றொரு வழக்கை முன்னெடுத்தோ அல்லது அரசியல் ரீதியில் பேசியோ மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதேவேளை குறித்த வழக்கின் தீர்பின் ஊடாக மிக முக்கிய விடையம் ஒன்றும் வெளிப்பட்டுள்ளது.
அதாவது மாகாண ஆளுகைக்குள் இருக்கும் பாடசாலைகளை மத்தி எடுப்பதற்கு அரசியல் யாப்பில் மத்திக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்று கூறியிருப்பதாவது மாகாணத்தின் எந்தவொரு விடையத்தையும் மத்தி எடுக்க முடியாது என்பதுடன்
குறிப்பாக 13 ஆவது சட்டத்தை மீறி மத்திய அரசு எதனையும் செய்ய முடியாது என்பதும் உறுதியாகியுள்ளது என்றார்.
Related posts:
|
|
|


