இராணுவம் என்ற ரீதியில் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Saturday, August 7th, 2021
முன்னாள் போராளிகளாகிய நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள். ஆனால் இராணுவத்தினர் ஆகிய நாம் அவற்றையெல்லாம் மறந்துவிட்டதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இராணுவம் என்ற ரீதியில் நாங்கள் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பில் செயற்பட்டு அரசாங்கத்திடம் சரணடைந்து நீண்டகாலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் புலி போராளிகளுக்கு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் உதவித்திட்ட நிதி இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் முயற்சியின் பயனாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் 15 முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உதவித்திட்டத்தை வழங்கிவைத்தபின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
இன்று நாம் உங்களை எமது சகோதரர்களாகவே பார்க்கின்றோம் எனவே நீங்களும் அதேபோல் நேரான பாதையில் பயணியுங்கள் உங்களது விடுதலை அனைவராலும் பார்க்கப்படுகின்ற விடயம் ஆகும்.
அதனால் தவறான வழியை நோக்கி இனியும் பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் எனவும் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் “அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும்.
எனவே முன்னரைப் போல பிழையான வழிகளில் செல்லாது சரியான பாதை நோக்கி செல்லுங்கள்.அதாவது நல்லதை சிந்தித்து, சமூகத்தில் உள்ளோர் உங்களை நல்லவர்கள் என்று சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.
மேலும் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய இராணுவத்தினராகிய நாம் தயாராக இருக்கின்றோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


