Sunday, July 18th, 2021
தெற்காசியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றாக மாறியுள்ளது – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
இன்றைய உலகப் பொருளாதாரத்தின் ஈர்ப்பு மையம் ஆசியாவை நோக்கியே வந்துள்ளது. அதேநேரம் தெற்காசியாவே உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றாக மாறியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
‘மத்திய மற்றும் தெற்கு ஆசியா பிராந்திய இணைப்பு – சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள்’ தொடர்பிலான சர்வதேச மாநாடு குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வலுவான, நடுநிலையான மற்றும் அணிசாராத வெளியுறவுக் கொள்கையால் பூர்த்தி செய்யப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய இணைப்பின் மூலம் நிலையான அபிவிருத்தியை அடைவதிலான இலங்கையின் நோக்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேசிய அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பான ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெருகிவரும் உலகமயமாக்கப்பட்ட மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்த உலகில் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு இணைப்பு இன்று இன்றியமையாததாகிவிட்டது.
நவீன காலங்களில் முதன்முறையாக, ஆசியப் பொருளாதாரங்கள் உலகின் ஏனைய பகுதிகளை விட பெரிதாகி வருகின்றன. அதே நேரத்தில், வளம் மற்றும் ஆற்றல் நிறைந்த மத்திய ஆசியாவின் பொருளாதாரத் திறன் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது.
இந்த சூழலில், தெற்கு மற்றும் மத்திய ஆசியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான கடல் மற்றும் நில இணைப்பு உலகளாவிய வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இன்றியமையாததாகி வருகின்றது.
உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கண்ட் நீண்ட காலமாக இலங்கையின் கொழும்புடன் விமானப் பயண இணைப்பை அனுபவித்து வருகின்றது. இருப்பினும், பரந்தளவிலான ஆற்றல் இருந்தபோதிலும், இரு பிராந்தியங்களுக்குமிடையேயான இணைப்பு இன்று ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் உள்ளது. எனவே தற்போதுள்ள ஈடுபாடுகளை வலுப்படுத்தி, எல்லை தாண்டிய சவால்களை சமாளிப்பதறடகாக தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வலுவான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உறவுகளை உருவாக்குவது அவசியமாகும்.
பிராந்திய இணைப்பை வலுப்படுத்தும் வகையில், சர்வதேச வர்த்தகம், வெளிநாட்டு வங்கி மற்றும் நிதிச் சேவைகள், கப்பல் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பரிமாற்ற நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக வெளிச்சேவைபெறல் செயன்முறை மற்றும் ஏனைய துணைச் சேவைகளில் போட்டிகரமான முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் இலங்கையில் உள்ள கொழும்புத் துறைமுக நகரம் விஷேட பொருளாதார வலயத்திற்கானதொரு எடுத்துக்காட்டாகும்.
நிறைவு செய்வற்கு முன்னர், இந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் இலங்கைக்கு ஆதரவளித்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்காக உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்திற்கு எமது ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக கொள்ள விரும்புகின்றேன்.
ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்காக மேன்மை தங்கிய தங்களுக்கும், மதிப்புமிக்க தலையீடுகளுக்காக பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


