புதிய அரசமைப்பு: எப்போதோ முடிந்த காரியம்!
Saturday, March 5th, 2016
யாழ்ப்பாணத்து யோகசுவாமிகள் என்றதும் நான்கு மகா வாக்கியங்கள் பற்றி நினைவுக்கு வரும். அந்த நான்கினுள் பிரதானமானது ‘எப்பவோ முடிந்த காரியம்’ – என்பதாகும்.
இலங்கைக்கு புதிய அரசமைப்பு கொண்டு வருவது பற்றிய விடயத்தைக் குறிப்பிடும்போது இந்த மகாவாக்கியம்தான் அப்படியே உண்மை என்று கூறலாம் போன்று தோன்றுகின்றது.
இலங்கையின் புதிய அரசமைப்பு என்பது எப்பவோ முடிந்த காரியம், எல்லாமே தீர்மானமாகி விட்டன என்கின்றன கொழும்பு அரசின் உள்வீட்டு உயர்மட்டங்கள்.
இலங்கைக்கு புதிய அரசமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தை அரசமைப்பு நிர்ணய கவுன்ஸிலாக மாற்றும் பிரேரணை இப்போதுதான் நடாளுமன்றுக்கு வந்திருக்கின்றது, இனித்தான் விடயங்கள் ஆராயப்படும் என்பதுபோல ஒருதோற்றம் வெளியில் காட்டப்படுகின்றது.
ஆனால் அதுமுற்றிலும் தவறு. எல்லாமே,எப்போதோ தீர்மானமாகி, இறுதியாகி விட்டன என்பதை அடித்துக் கூறுகின்றன கொழும்பு அரசின் உயர் மட்டங்கள்.
“ஒற்றையாட்சிக் கோட்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஐக்கிய இலங்கைக்குள், பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில், இணைந்த வடக்கு, கிழக்குக்கு, அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும்” – என்று இப்போதும் கூட அடிக்கடி ஒரேபோடாகப் போடுகிறார் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன்.
ஆனால் அவரது ‘ஏவல் பிராணியான’ சுமந்திரன் மட்டும் இப்போது இந்த விடயத்தில் அதிகம் பம்முகின்றார்; அடக்கி வாசிக்கின்றார். ஐக்கிய இலங்கை பற்றிப் பேசுகின்றார். ஆனால் சமஷ்டி குறித்து நீட்டி முழக்குவதில்லை. சமஷ்டிச் சாயல் (குநனநசயட ஊhயசயஉவநசளைவiஉள) பற்றித்தான் சாடைமாடையாகத் தொட்டு நிற்கின்றார். ஒற்றையாட்சி முறைமையை அடியோடு நிராகரிக்கின்றோம் என்று அவர் இப்போதெல்லாம் திட்டவட்டமாகக் கூறுவதில்லை. இணைந்த வடக்கு, கிழக்குத் தாயகம் பற்றியும் அவர் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. எல்லாவற்றுக்கும் ஒருகாரணம் உண்டு.
மறுபுறத்தில் நாட்டின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று போகுமிடம் எங்கும் உரத்தகுரலில் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறுகின்றார்கள்.
அதற்கும் காரணம் உண்டு.
அது என்னவென்றால், நாட்டின் புதிய அரசமைப்பு வடிவம் எத்தகையது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டவிடயம் என்பதுதான்.
ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ‘நல்லாட்சிக்கான அரசு’ தனது ஓராண்டு ஆட்சிக் காலத்துக்குள்ளேயே புதிய அரசமைப்புக்கான வடிவத்தை ஓரளவு இறுதியும் உறுதியும் செய்துவிட்டது என்பதுதான் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் இன்று பகிரங்கமாகிவரும் உள்வீட்டு உண்மையாகும்.
ஆளும் தரப்பின் தேசியப் பட்டியல் எம்.பியான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ணவின் வழிகாட்டுதலில் புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ள நிபுணர் குழு பெரும்பாலும் புதிய அரசமைப்பு வடிவத்தைத் தயார் செய்து முடித்து விட்டது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘தானைத் தலைவன்’ சுமந்திரனும் அங்கம் வகிக்கின்றார் என்பதுதான் சோகம் கலந்த உண்மை.
“உத்தேச புதிய அரசமைப்பு, திட்டவட்டமாகவும் தெளிவாகவும் ஒற்றையாட்சியை வலுப்படுத்தி, உறுதிப்படுத்தி நிற்கின்றது. அதில் சமஷ்டியும் கிடையாது. சமஷ்டிச் சாயலும் கிடையாது. வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இது சுமந்திரனுக்கும் சம்பந்தனுக்கும் – ஏன் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கூட – நன்கு தெரிந்த உண்மைகள் தான்.
“கிழட்டுச் சிங்காரிக்கு அரிதாரம் பூசிய மாதிரி பழைய மாகாணசபைக்கு கொஞ்சம் ‘மேக் அப்’ செய்து அனுப்பப் போகிறார்கள். அவ்வளவுதான்;. அவ்வளவு மட்டும்தான்.
“காணி அதிகாரம் என்ற பெயரில் சில மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படும். பொலிஸ் அத்தியட்சகர் மட்டத்திலான பொலிஸ் அதிகாரமும் உண்டு. எனினும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள மத்திய அரசின் அதிகாரிகளினால் தேவைப்படும் சமயங்களில் கட்டுப்படுத்தப்படும் விதத்தில் அந்த அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
“தற்போதைய அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ளபடி, மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கான துறைகள் தொடர்பான வரையறுக்கப்பட்ட தனித் தனிப் பட்டியல்கள் தொடர்ந்து இருக்கும். ஆனால் இரண்டு அதிகார மையங்களுக்கும் பொதுவான துறைகள் என்ற பொதுப் பட்டியல் முறை நீக்கப்படும்”
– இவையே புதிய – உத்தேச – அரசமைப்பு நகல் வடிவத்தில் உள்ளடங்கியுள்ள பிரதான அம்சங்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் உண்மையைப் போட்டுடைத்துள்ளன.
இது தெரியவந்ததும்தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதைபதைத்து, பதற்றமடைந்து, தமிழ் மக்கள் பேரவை என்று ஒன்றைத் தோற்றுவித்து, விடயத்தை – சவாலை – எதிர்கொள்ளத் துடியாய் துடிக்கின்றார்.
புதிய அரசமைப்பு முயற்சி என்பது நாட்டின் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஓர் எத்தனமாக அமையவேயில்லை என்பதும் இப்போது அம்பலமாகும் நிஜமாகும்.
தென்னிலங்கை அரசின் நெருக்கடிகளுக்கான ஒரு தீர்வாகத்தான் அது இப்போது கொண்டு வரப்படுகின்றதேஒழிய, நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு தீர்க்கமான எத்தனமாக – முயற்சியாக – அது முன்னெடுக்கப்படவேயில்லை என்றும் கொழும்பு உயர் அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை, சீர்கெட்டுச் சென்றுள்ள நீதித்துறை முறைமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்தபடி கட்சி – அணி – தாவும் சூழல் ஆகிய நெருக்கடிகளால் எழுந்துள்ள அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சியாகவே புதிய அரசமைப்பு உருவாக்கத்தை தென்னில்ஙகை அரசியல் தலைமைகள் பிரதானமாக நோக்குகின்றன.
முழு நாட்டையுமே பல தசாப்தகால யுத்த பேரழிவுக்குள் தள்ளிபெரும் நாசத்தை ஏற்படுத்திய இனப்பிரச்சினை நெருக்கடி, இராணுவ ரீதியில் முறியடிக்கப்பட்டுவிட்ட வெற்றிப் பெருமிதத்தில் மிதந்து கொண்டிருக்கின்றது தென்னிலங்கை. அத்தகைய நிலையில் இனப்பிரச்சினை என்ற ஒரு நெருக்கடி இருப்பதாகக் கருதவோ அல்லது அதற்கு தீர்வு ஒன்று அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகின்றது என்று உணரவோ தென்னிலங்கை தயாரில்லை.
ஆகவே உத்தேச, புதிய அரசமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற விவகாரத்தை முக்கியத்துவம் கொடுத்து ஆராயவோஅல்லது பரிசீலிக்கவோ வேண்டிய தேவையும் அதற்கு இல்லை.
இதுதான் யதார்த்தம்; இதுதான் உண்மை.
இன்னும் சில மாதங்களுக்குள் – புதிய அரசமைப்பு என்ற ஆவணம் முகிழ்ந்து விடும். அப்போது உண்மைகள் எல்லாம் அம்பலமாகிவிடும்.
அது தெரிந்தும் – உண்மை நிலையை உணர்ந்தும் – கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் “ஒற்றையாட்சியை ஏற்கோம்; சமஷ்டித் தீர்வே ஒரே முடிவு. இணைந்த வடக்கு – கிழக்கு உறுதிப்படுத்தப்படும்” – என்றெல்லாம் இன்னும் கதைவிட்டு – கயிறு கொடுத்து – புருடா பண்ணிக்கொண்டிருப்பதுதான் விஷமத்தனம்.
அடுத்த சில மாதங்களுக்குள் உண்மை அம்பலமாகும் போது – விடயம் புட்டுக்கொள்ளும் போது – தமது முகத்தை அவர் எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வார் என்பதுதான் கேள்வி.
– வசிட்டன்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106