தனித் தமிழரசு என்று மார் தட்டி கூறுயது இதுதானோ!

Friday, February 12th, 2016

 

வாசக நெஞ்சங்களை
மறுபடியும் ஒரு மடலில்
சந்திப்பதில் மகிழ்ச்சி!…
நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!…
வானமேறி சூரிய சந்திர்களை
பூமிக்கு கொண்டு வந்து தருவோம்,…
மயிரை கயிறாக கட்டி நீட்டி
மலையை வெட்டிப்புரட்டி வீழ்த்துவோம்!..
இந்த சொற்பன சொல்லடி வித்தைகளுக்கு
தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு போதும்
கிஞ்சித்தும் பஞ்சம் இருந்ததில்லை.
அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் என்றும்,
அடுத்த மேதினம் சுதந்திர தமிழீழத்தில்
நடக்கும் என்றும்,…
கூட்டத்தில் கூடி நின்று
கர்ஜித்தவர்களின் கதை கேட்டு
தமிழ் மக்களின் காதுகள்
புளிச்சுப்போன வரலாறுகளே இங்கு மிச்சம்!..
வானதிரும் இந்த வாக்குறுதிகளை
அள்ளி வழங்கிய வீரத்தலைவர்கள்
கஐ, ரத, துரத, பதாதிகள் என்று
நாற்றிசையும் அதிர நாற்படைகளை
வைத்திருந்தவர்கள் அல்ல….
யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே
என்பது போல்,….
அடுத்து வரும் தேர்தலுக்கு
கட்டியம் கூறுவது போல்
அடுக்கடுக்காக வாக்குறுதிகளை
அள்ளி வீசும் பழம்பெரும் அரசியல்
தலைவர்களே அவர்கள்.
இந்த வரலாற்று நீட்சியின் பழக்க தோசத்தில்
பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டு
தமிழருக்கு நல்ல காலம் பிறக்கும் என்று
திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்
திருமலை சம்பந்தன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை
திருமலை சம்பந்தன் என்று
குறுக்கி கூறுவது குற்றமென்று காண்பீர்கள்.
அது நம் தவறல்ல…
தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது
புலிகள்தானே என்று ஊடகம் ஒன்று
அண்மையில் கேள்வி கேட்ட போது,…
தனக்கு தெரியாது என்றும்,
தனது மாவட்டத்தில் அப்படி எதுவும்
நடக்கவில்லை என்றும்
பதிலளித்தவர் சம்பந்தன் ஐயா.
தன்னைத்தானே திருமலை சம்பந்தனாக
அவரே குறுக்கிக்கொண்டதற்கு
அடுத்தவர்கள் குற்றவாளிகள் அல்ல!
வரலாறெங்கும் கனிந்து வந்த
வாய்ப்புகளை எல்லாம்
துடக்கென்று தூரத்தள்ளி வைத்து,
கோட்டை விட்டவர்கள் இவர்கள்.
குறிப்பாக,..
சந்திரிகா ஆட்சிக்காலத்தில்
கொண்டு வந்த தீர்வை கொழுத்தி எரித்து
சவப்பெட்டியில் அடைத்தனர்.
கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமோ?
பின் தோன்றி பிறந்த சுடலை ஞானமோ?
யாருக்கும் தெரியாது!…
வந்த வாய்ப்புகளை பயன்படுத்த மறுத்ததால்
அவலப்பெருங்காட்டில் எமது மக்களை
அழிய விட்ட வரலாற்று தவறுகளுக்காக
அவர்களே தேடும் பாவவிமோசனமோ?..
அதுவும் தெரியாது!…
நல்ல காலம் பிறந்திருக்கு…
நல்ல காலம் பிறந்திருக்கு…
குடுகுடுப்பை சாத்திரி போல் சம்பந்தன் ஐயா
கூப்பாடு போடுகிறார்.
சொல்வதை இனியாவது செய்து காட்ட
சித்தம் கொண்டு எழுவார்களா?..
எண்ணத்தில் நலமிருந்தால்
ஈடேறும் இலட்சிய கனவுகள்.
எந்த தமிழர் தரப்பும் இது போல் இதுவரை
அரசியல் பலத்தோடு அரசுடன் இணைந்ததில்லை.
பேரம் பேசும் அரசியல் பலத்தோடு
எதிர்க்கட்சி நாற்காலியில் குந்தியிருப்பது
இவர்கள் எதிரி கட்சியாக அல்ல.
இது தாமே உருவாக்கிய அரசு என்று
மார் தட்டியே கூறுகின்றனர்.
குழுக்களின் பிரதித்தலைவர் சிம்மாசனத்திலும்
ஏறிக்குந்தி பங்கெடுத்திருக்கின்றனர்.
இதை அடுத்தவன் செய்தால் துரோகம்.
அவர்களே செய்தால் அது தமிழ் தேசியம்.
வழிக்கு வந்தமைக்கு முதலில் வாழ்த்துக்கள்!
கிடைத்திருக்கும் அரசியல் பலத்தை கொண்டு
கிடைக்க வேண்டிய மாற்றத்தை உருவாக்கட்டும்.
மாற்றங்களை உருவாக்கினால்
பாவ விமோசனம் பலித்தது என்போம்.
இல்லை என்றால் என்ன செய்வது?..
மக்களே தீர்மானிக்கட்டும்.
மாற்றங்கள் நடந்ததாக அதிசயம் நடந்தால்,….
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தலின் கீழ்
மாவிலை கமுகு தோரணம் கட்டி
தொங்க விட்டு தமிழ் பேசும் மக்கள்
வாழ்வெல்லாம் வரவேற்பார்கள்!…
நன்றி!..
மறுபடியும் மறுமடலில்
சந்திப்போம்!…



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106