விளையாட்டு மாபியா காரணமாக கிரிக்கெற்றை அபிவிருத்தி செய்வது கடினம்!

Wednesday, December 7th, 2016

அதிகாரிகளின் செயற்திறன் இன்மை மற்றும் விளையாட்டு மாபியா காரணமாக கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வது கடினமாகுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

நேற்று (05) பாராளுமன்றில் விளையாட்டு துறை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். மேலும் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: தற்பொழுது இலங்கை கிரிக்கெட் தகுதியற்ற ஊழியர்களை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் விளையாட்டு துறையில் எவ்வித முன்னேற்றங்களும் எட்டப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்டளவு சர்வதேச வெற்றிகள் ஈட்டப்படவில்லை. விளையாட்டுத் துறையானது தனி ஆளுமைகளை அபிவிருத்திச் செய்யும் வியாபாரமாக மாற்றியமைக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றியீட்டுவதைக் காட்டிலும் கொண்டாட்டங்கள் மாத்திரமே ஒழுங்குசெய்யப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடைய புதல்வர்கள் தொடர்ச்சியாக விளையாட்டுத் துறையில் தலையீடுகளை மேற்கொண்டமையை நாம் கண்டோம்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் விளையாட்டுத் துறையிலும் நல்லாட்சி நிறுவப்பட்டது. இன்று ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ விளையாட்டுத் துறை மீது எவ்வித அநாவசிய தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. விளையாட்டுதுறை அமைச்சர் மிகவும் சுதந்திரமான முறையில் தன்னுடைய நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க சர்ந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் கிரிக்கெட் விளையாட்டின் பொருட்டு காட்டுகின்ற ஆர்வத்தை நான் பாராட்டுகின்றேன். கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் பாடசாலை மட்ட கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதை அரசாங்கம் தற்பொழுது புரிந்துகொண்டுள்ளது. தற்பொழுது தகுதியற்ற நபர்கள் கிரிக்கெட் விளையாட்டில் உட்புகுந்துள்ளதால் கிரிக்கெட் விளையாட்டு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களின் பொழுது தனக்கு உதவி புரிந்த நபர்களிற்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை தற்பொழுது கிரிக்கெட் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

தேசிய அபிவிருத்தி பிரிவின் ஆலோசகராக ஒரு இலட்சம் ரூபா சம்பளத்திற்கு அநுர வீரசிங்க என்பவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ரூ. ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கொடுப்பணவிற்கு மனித வளங்கள் பிரிவின் தொடர்பாடல்கள் அதிகாரியாக கிரிசாந்த டி சில்வா, ரூ. 2 இலட்சம் கொடுப்பணவிற்கு கிரிக்கெட் விசேட நிபுணராக இந்திரானி ஆரியரத்ன, இளம் கிரிக்கெட் தொடர்பாடல்கள் அதிகாரியாக பிரியந்த அல்கமவும் பிரதி தலைவர் – சர்வதேச கிரிக்கெட் தொடர்பாடல்கள் அதிகாரியாக ஷிப்லி காசிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை இதற்கான உதாரணங்களாகும்.

இதற்கு மேலதிகமாக ஆலோசகராக ராய் ரேமன்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடக முகாமையாளரொருவர் இருக்கையில் இவ்வாறானதொரு நியமணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பெண்மனி கடந்த கிரிக்கெட் தேர்தலின் பொழுது எனக்கெதிராக முறைப்பாடுகளை முன்வைத்த தரப்பினரின் சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டார்.

அதேபோல் கடந்த கிரிக்கெட் தேர்தல்களின் பொழுது தற்போதைய நிர்வாகத்தினர் பொருட்டு அனைத்து விதமான தொடர்பாடல்கள் நடவடிக்கைகளையும் முன்னெடுத்த கொட்பி தாபரே என்னும் நபர் இலங்கையிலுள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே கடந்த தேர்தலின் பொழுது உதவிய அனைவருக்கும் தற்போதைய நிர்வாகம் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளதென்பது தெளிவாகின்றதல்லவா? கடந்த கிரிக்கெட் தேர்தல்களின் பின்னர் இலங்கை கிரிக்கெட்க்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களின் பெயர்ப் பட்டியலை இச்சபைக்கு சமர்பிக்குமாறு இச்சந்தர்பத்தில் நான் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பணவுகள் மற்றும் வரப்பிரசாதங்களையும் இச்சபையில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

1996ம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்ட பொழுது எம்மிடம் மிகவும் திறமையான அணியொன்று இருக்கவில்லை. பணத்தை காட்டிலும் நாட்டிற்கு அன்பு செலுத்துகின்ற அணியினரே இருந்தார்கள். நாம் பணத்தை காடடிலும் நாட்டை பற்றியே சிந்தித்தோம். விளையாட்டுத் துறையில் பணத்திற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டம் எம் நாட்டு விளையாட்டு துறையை ஆக்கிரமித்துள்ளது.

பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்திற்கு மறைமுகமாக தொடர்புபட்ட மற்றும் நேரடியாக தொடர்புபட்ட நபர்கள் விளையாட்டுத் துறை நிர்வாகத்தில் உட்புகுவதை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களின் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. விளையாட்டு சட்டதிட்டங்களில் பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்துடன் தொடர்புடைய நபர்களிற்கு விளையாட்டு நிறுவணங்களில் பதவிவகிக்க இயலாதென குறிப்பிடப்பட்டுள்ளதென போதும் இவ்விடயம் தொடர்பில் விரிவாக குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாக பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்துடன் தொடர்புடைய பெரும்பாலான நபர்கள் சட்ட ஓட்டைகளுள் புகுந்து விளையாட்டு நிர்வாகத்தின் உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். இது விளையாட்டின் நல்லாட்சிக்கு மாபெரும் சவாலாகும்.

0c5acolarjuna-ranatunga-640x400145615955_5075690_05122016_aff_cmy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106