பாதீட்டுடில் தீர்வுகள் இல்லை –  நவம்பர் 17 தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும்  அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Monday, November 16th, 2026


……..
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட குறித்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் உபுல் ரஞ்சித் குமார, ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பாதீட்டு முன்மொழிவுகள் தொடர்பில் தமது சங்கம் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் கடுமையான ஆளணிப் பற்றாக்குறைக்கு மத்தியில் மிகவும் சிரமமான பணிச்சூழலில் சேவையாற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, 931 கால்நடை மருத்துவ அதிகாரிகள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது சுமார் 600 அதிகாரிகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆளணிப் பற்றாக்குறை காரணமாக கால்நடை மருத்துவ அதிகாரிகள் மேலதிக கடமைகளையும் பொறுப்பேற்று நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, பாதீடு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் மேலதிக கடமைக்கான கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும், இந்த முறை பாதீட்டில் அதற்குச் சாதகமான எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன், அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துக் கொடுப்பனவை கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த கொடுப்பனவு வழங்கப்படாமை அரச சேவையில் பணியாற்றும் கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி எனச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் கே.டி. லால்காந்தவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னரும் தமது கோரிக்கைகள் பாதீட்டு முன்மொழிவுகளில் உள்ளடக்கப்படவில்லை எனச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அரச சேவையின் வெவ்வேறு அதிகாரிகளுக்கு வெவ்வேறு விதமாக நடத்தப்படும் நிலை இம்முறை பாதீட்டிலும் வெளிப்படுவதாக மருத்துவர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி நோய்வாய்ப்பட்ட விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அன்றைய தினம் வானுர்தி நிலையங்களிலுள்ள கால்நடை மருத்துவ அலுவலகங்களின் சேவைகளிலிருந்தும் விலகுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் 2027ஆம் ஆண்டு முதல் மேலும் பல தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக, பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதிலிருந்து விலகுவதுடன், பிராந்திய அலுவலகங்கள் ஊடாக வரிசை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்தும் விலகுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விரைந்து கவனம் செலுத்தி உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106