டிசெம்பர் 1 முதல் புதிய நடைமுறை – யாழ். புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து நீண்டதூரப் பேருந்து சேவைகள் ஆரம்பம்!

Friday, November 13th, 2026


….
யாழ்ப்பாணத்தில் 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனைத்துப் பேருந்துகளும் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே தமது சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், யாழ்ப்பாணப் பேருந்து நிலையங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அவசர ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் இன்று (13) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் சேவைகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் அங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்காத நிலை தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரச் சேவைகளில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனைத்துப் பேருந்துகளும் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என அதன் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

இதற்கு வடபிராந்திய பிரதான முகாமையாளர் மற்றும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் சாலைகளின் முகாமையாளர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

எனினும், 100 கிலோமீற்றருக்குக் குறைவான உள்ளூர் பேருந்துச் சேவைகள் தற்போதைய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

அரச, தனியார் பேருந்துகளுக்கு ஒரே நேர அட்டவணை
இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேரத்தில் புறப்படுவதால் ஏற்படும் நேர மோதல்களையும் பயணிகளுக்கான சிரமங்களையும் தவிர்க்கும் வகையில், இரு தரப்பினருக்குமான இணைந்த நேர அட்டவணையை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் அலுவலர்களுக்கான சேவைப் பேருந்துகளையும் உரிய ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக இந்த நேர அட்டவணைக்குள் உள்ளடக்க இணக்கம் காணப்பட்டது.

இதற்கான திருத்தங்களை மேற்கொண்டு நவம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் நேர அட்டவணையை இறுதிப்படுத்தவும், நவம்பர் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பயணிகளின் முற்பதிவுக்கும் புதிய ஏற்பாடு
இணையவழி மற்றும் தொலைபேசி ஊடாக முற்பதிவு செய்யும் பயணிகளும் 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரச் சேவைகளுக்காக புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே பேருந்துகளில் ஏற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் முற்பதிவு மற்றும் சேவைகளை இலகுவாக்கும் வகையில், புதிய பேருந்து நிலையத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும் தனியார் பேருந்துச் சங்கத்தினருக்கும் தனித்தனி அலுவலக அறைகளை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனைத்துப் பேருந்துகளுக்கும் ஜி.பி.எஸ். கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்துக்கு சேவைகள் மாற்றப்படும் ஆரம்பக் காலப்பகுதியில் பயணிகளின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த பொலிஸ் விசேட குழுவொன்றை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேநேரம் அனுமதியற்ற பேருந்துச் சேவைகளுக்கு எதிராக நடவடிக்கை
‘Staff Service’ என்ற பெயரில் உரிய வழித்தட அனுமதியின்றி இயங்கும் சில பேருந்துகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இத்தகைய சேவைகளுக்கு அனுமதி பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வச் சான்றுகள், நிறுவனத் தலைவரின் உறுதிப்படுத்தல், பயணிக்கும் அலுவலர்களின் விவரங்கள் மற்றும் ஆசன எண்ணிக்கை உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன் உரிய அனுமதியின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சில தனியார் பேருந்துகள் யாழ்ப்பாண நகரப் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து பயணிகளை ஏற்றுவது தொடர்பான முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டன.

குறித்த பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106