மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கைகொடுத்தவர்களுக்கு மாகாண ரீதியில் கௌரவிப்பு – யாழில் சிறப்பாக நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வு!

Thursday, November 12th, 2026


…….
மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பங்களிப்பு வழங்கியவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வடக்கு மாகாண மட்ட விருது வழங்கும் நிகழ்வு இன்று (12) யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் Jaffna City Hotel (Tilko Hotel) இல் நடைபெற்றது.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கைலைவாசன் சிவகரன் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வை
சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்சினி கருணாரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து, சம்பிரதாயபூர்வமான மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தித் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கி வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்கிய நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட 92 மாற்றுத்திறனாளிகள், தொழில் வாய்ப்புகளை வழங்கிய  நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுமார் 250 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் வடக்கின் பிரதேச செயலாளர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் வாய்ப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் தொழில்சார் ஆற்றல்களையும் சமூகத்திற்கு அடையாளப்படுத்துவதுடன், அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டி, சுயமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்குச் சமமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார உள்ளடக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அங்கீகரிப்பதோடு மட்டுமன்றி, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் பங்களித்த அனைத்துத் தரப்பினரையும் ஒரே மேடையில் கௌரவித்த இந்நிகழ்வு, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய முயற்சியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106