ஒக்டோபர் 17 – நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணம் இதுவா?
Saturday, October 31st, 2026
…..
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையானது, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கியின் மின் உற்பத்தி திடீரென வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டதாக தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் (National System Operator – NSO) வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமையத் தயாரிக்கப்பட்ட குறித்த ஆரம்பகட்ட அறிக்கை, கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் எம்.பி.எஸ். சமரசேகரவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, ஒக்டோபர் 17ஆம் திகதி முற்பகல் 11.43 மணியளவில் மின் கட்டமைப்பில் இந்தப் பாதிப்பு ஆரம்பித்துள்ளது.
இதன்போது, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி ஊடாக தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட 187 மெகாவாட் மின்சாரத்தில், 450 மில்லி செக்கன்களுக்குள் 85 மெகாவாட் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேசிய மின் கட்டமைப்பின் அதிர்வெண் (Frequency) வேகமாகக் குறைவடைந்துள்ளது.
இரண்டு செக்கன்களுக்குள் மின் கட்டமைப்பின் அதிர்வெண் 49.906 ஹெர்ட்ஸிலிருந்து 48.75 ஹெர்ட்ஸாகக் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, குறைந்த அதிர்வெண் நிலை ஏற்படும்போது தானாகவே மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் பாதுகாப்புக் கட்டமைப்பின் ஐந்து கட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், அதனூடாகவும் தேசிய மின் கட்டமைப்பின் முழுமையான வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.
அதன்படி, முற்பகல் 11.43 மணி 59 செக்கன்களாகும் போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த அனைத்து மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி திடீரென வீழ்ச்சியடைந்ததற்கான காரணம் தொடர்பில் ஆரம்பகட்ட அறிக்கையில் உறுதியான முடிவு எதுவும் முன்வைக்கப்படவில்லை.
அந்தச் சந்தர்ப்பத்தில் மின்பிறப்பாக்கி தானாகவே துண்டிக்கப்பட்டதாகப் பதிவுகள் இல்லாத காரணத்தினால், மின் கட்டமைப்பின் அதிர்வெண் மாற்றத்துக்கு அது எதிர்வினையாற்றியிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மின்சாரத் தடை ஏற்பட்டபோது தேசிய மின் கட்டமைப்பின் மொத்த மின்சாரத் தேவை 1,135 மெகாவாட்டாக இருந்துள்ளது.
அவசர நிலைமைகளின்போது பயன்படுத்தக்கூடிய மேலதிக மின் உற்பத்தித் திறன் 332.5 மெகாவாட்டாகக் காணப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரத் தடை ஏற்பட்ட உடனேயே மின் கட்டமைப்பை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொத்மலை, விக்டோரியா மற்றும் நவ லக்ஷபான உள்ளிட்ட நீர்மின் உற்பத்தி நிலையங்களின் உதவியுடன் மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, பிற்பகல் 12.11 மணிக்கு கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 4.58 மணியளவில் பிரதான மின்சாரக் கடத்தல் கட்டமைப்பு முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதான மின்சாரக் கடத்தல் கட்டமைப்பை மீளமைப்பதற்கு சுமார் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் எடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சில மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, அவற்றை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் சில மின்பிறப்பாக்கிகள் உள்ளிட்ட ஏனைய மின் உற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகளை மீண்டும் இயங்கச் செய்வதில் தொழில்நுட்பத் தடைகள் ஏற்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரத் தடை தொடர்பில் தயாரிக்கப்பட்ட மேலதிக அறிக்கையின்படி, குறைந்த அதிர்வெண் பாதுகாப்பு முறைமையின் கீழ் 449.2 மெகாவாட் மின்சாரத் தேவையைத் துண்டிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்துள்ளது.
இது அச்சந்தர்ப்பத்தில் காணப்பட்ட மொத்த மின் உற்பத்தியில் 39.6 சதவீதத்துக்குச் சமமானது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106