உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மசோதாவை உடனே திரும்பப் பெறுக-  அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்து!

Tuesday, October 27th, 2026


…..
​இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு மசோதாவை’ (Prevention of Organised Crimes Bill) உடனடியாக வாபஸ் பெறுமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கடுமையான கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு அதீத அதிகாரங்களை வழங்குவதோடு, நாட்டின் அடிப்படை மனித உரிமைகளைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (27) வெளியிடப்பட்ட அறிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மிகவும் ஆபத்தான சட்டங்களில் இதுவும் ஒன்று என அம்னெஸ்டி வர்ணித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் சந்தேகநபர்களை முறையான குற்றச்சாட்டு இன்றி ஒரு வருடமும், அதனைத் தொடர்ந்து விசாரணைக் காலத்திற்குள் மேலும் ஒரு வருடமும் மொத்தம் 2 ஆண்டுகள் வரை நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைக்க வழிவகுப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​மேலும், காவல்துறையினர் பிடியாணையின்றி சோதனைகள் நடத்தவும், தொலைபேசி பதிவுகள், சந்தாதாரர் விபரங்கள் மற்றும் சாதனங்களின் இருப்பிடத் தரவுகளை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பெறவும் இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

குறிப்பாக, சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளவும், காவலில் சித்திரவதை அல்லது துஷ்பிரயோகம் நடைபெற்றதை நிரூபிக்கும் முழுமையான சுமையை பாதிக்கப்பட்ட நபர் மீதே சுமத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

​ஒரு நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரா என்பதைத் தீர்மானிக்க, அவரது உடைகள், பச்சைக்குத்தல், கைச் சைகைகள், மொழி மற்றும் செல்லும் இடங்கள் போன்றவற்றை நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படலாம் என்ற விவகாரமும் கவலை அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காவல்துறையினருக்குத் தேவையான தகவல்களை வழங்கத் தவறும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 200,000 அபராதம் விதிக்கப்படலாம்.

​இலங்கை வரலாற்றில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) மிக மோசமான கூறுகளை இந்தச் சட்டம் மீண்டும் கொண்டுவருவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் தெற்காசியப் பணிப்பாளர் ஸ்மிருதி சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

​ஏற்கனவே இலங்கை மனித உரிமைகள் ஆணையம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவையும் இந்த மசோதாவை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

​இதனிடையே, தீவிர குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்தச் சட்டம் அவசியமானது என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 6 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்ட இந்த மசோதா, அக்டோபர் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது முதலாம் வாசிப்பு நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106