வடக்கு – கிழக்கில் ஏழு தமிழ் அமைப்புக்களிடமிருந்து ஆயுதங்கள் ஒப்படைப்பு -நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!

Saturday, October 17th, 2026


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதல்கள் நிலவிய காலப்பகுதியில், புலிகளின் அச்சுறுத்தலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள், பின்னர் பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அவர்களால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழங்கிய பதில்களில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சினால் பராமரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வடக்கு – கிழக்கில் செயற்பட்ட ஏழு தமிழ் அமைப்புகள் தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் அணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரதராஜப்பெருமாள் அணி, கருணா தரப்பு மற்றும் ஈழப் புரட்சி மாணவர் இயக்கம் (EROS) ஆகியவை உள்ளடங்குகின்றன.

இலங்கை இராணுவத்திடமுள்ள தகவல்களின்படி, குறிப்பிட்ட அமைப்புகளிடம் இருந்து பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, பாதுகாப்பு தரப்பால் வழங்கப்பட்ட ஆயுதங்களில், மக்கள் ஈழ மக்கக் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் (EPDP),  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), கருணா தரப்பு, ஆகிய அமைப்புகளே மீளவும் ஒப்படைத்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நான்கு தரப்புகளிடமிருந்தும் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் மொத்த எண்ணிக்கை 801 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டக்ளஸ் தேவானந்தா தொடர்பான விசாரணைக்காக EPDP யிடம் இருந்து ஒப்படைக்கப்பட்ட 30 ஆயுதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்வேறு ரக ஆயுதங்கள்
குறித்த அமைப்புகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுத வகைகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தபோது, T-56 ரகத் துப்பாக்கிகள், தன்னியக்கத் தாக்குதல் துப்பாக்கிகள், இலகுரக மற்றும் நடுத்தர வகை இயந்திரத் துப்பாக்கிகள், ரொக்கெட் எறிகுண்டு செலுத்திகள் (RPG), மோட்டார் எறிகுண்டு செலுத்திகள் மற்றும் எறிகுண்டு செலுத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒவ்வொரு வகை ஆயுதமும் எத்தனை எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டன என்பதைத் துல்லியமாகத் தனித்தனியாகக் குறிப்பிடுவது கடினமானது எனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடற்படையினரால் 28 ஆயுதங்கள் மீட்பு
இலங்கை கடற்படையினரின் தகவல்களின்படி, செயற்பாட்டுப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள், சோதனைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட 28 ஆயுதங்கள் கடற்படையின் ஆயுதப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 19 ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையிலும், ஏனைய ஒன்பது ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளும் அவற்றின் தலைவர்களையும் பெரும்பாலான உறுப்பினர்களையும் பொறுத்தவரையில், அவர்கள் தற்போது சாதாரண நடவடிக்கைகளுக்குத் திரும்பியுள்ளதுடன், சிலர் செயற்பாட்டு அரசியலிலும் இணைந்துள்ளதாகப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த அமைபுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்புத் தரப்புகள், முப்படைகள், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் ஊடாகத் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106