“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!
Sunday, August 30th, 2026
“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்? அரச நாடாளுமன்ற உறுப்பினர்களே! மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறி வாக்குப் பிச்சை கேட்டு வந்தீர்கள், வெற்றி பெற்றதும் உங்களுக்கு வாக்களித்த மக்களை மறந்துவிட்டீர்கள்” என்ற வலுவான கோஷங்களை முன்வைத்து, வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெற்று, தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காணி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பலாலி சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது பூர்வீக நிலங்களை நீண்டகாலமாக இழந்து, சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டனர்.
“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே; அதை எப்படி உங்களுடையதாக மாற்ற முடியும்?”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?”, “வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும், தேர்தல் காலங்களில் மக்களின் காணிகள் மீள வழங்கப்படும் எனக் கூறி ஆதரவைப் பெற்ற அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்த பின்னர் காணி இழந்த மக்களின் பிரச்சினையை மறந்து செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பல தசாப்தங்களாக தமது காணிகளை இழந்து வாழ்ந்து வரும் நிலையில், பல்வேறு அரசாங்கங்கள் மாறினாலும் தமது அடிப்படைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமது பூர்வீக நிலங்களை விடுவிப்பது வெறுமனே காணி உரிமை தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், அது தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமையுடன் தொடர்புடையது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயற்றிட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும், இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் காணி இழந்த பலாலி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 11ஆவது வாரமாகவும் இடம்பெற்றுள்ள இந்த தொடர் போராட்டம், பலாலி மக்களின் காணி உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106