மண்டைதீவு படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் – கண்ணீருடன் உறவுகள் அஞ்சலி!

Thursday, August 27th, 2026


……
1990ஆம் ஆண்டு மண்டைதீவில் இடம்பெற்ற படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (26) தீவக மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

36 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களின் நினைவாக, படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்றுகூடி, சுடரேற்றி, மலர் தூவி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், படுகொலையில் தனது மகனை இழந்த 81 வயதான ஸ்பன் மரில்டா முதன்மைச் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அருட்தந்தை வசந்தன் மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு உறவினர்கள் மலர்மாலை அணிவித்தனர்.
மண்டைதீவு பங்குத்தந்தை அலோய் அருணேஷ்குமார், அருட்தந்தை வசந்தன், அருட்சகோதரிகள், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி. அசோக்குமார், பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், அனுசியா ஜெயகாந்த், ஜோசம் கனிஸ்டன் உள்ளிட்ட பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
1990ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமலாக்கப்பட்டதாகவும், மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காணாமலாக்கப்பட்டவர்களின் உடல்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள சில கிணறுகளில் போடப்பட்டுள்ளதாகவும், அதற்கான வாழும் சாட்சிகள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பில், தனது மகனை இழந்த 81 வயதான ஸ்பன் மரில்டா மற்றும் வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் நீதி கோரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, சம்பவத்தின் வாழும் சாட்சியாகக் கருதப்படும் உயிரிழந்த ஒருவரின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் அன்றைய சம்பவங்களை நினைவுகூர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது தனது மகனை இழந்த தாயார் தெரிவிக்கையில், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் மண்டைதீவில் படுகொலைகளும் காணாமலாக்கல்களும் இடம்பெற்றதாகவும், தனது மகன் இராணுவத்தினரால் தனது கண்முன்னே கைது செய்யப்பட்டு, உறவினர் ஒருவரின் வீட்டின் பின்புறத்தில் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்தப் பகுதியில் கொல்லப்பட்ட பலரின் உடல்களை அப்பகுதி மக்களை கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடியதாகவும், அவ்வாறு உடல்கள் போடப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளில் ஒன்றே தற்போது நினைவேந்தல் இடம்பெற்ற கிணறு எனவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இன்னும் பல கிணறுகளில் அத்தகைய உடல்கள் இருக்கலாம் எனவும், அவற்றை வெளிக்கொண்டு வந்து உண்மையை வெளிப்படுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தினர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106