நாட்டை அச்சுறுத்தும் துப்பாக்கிச் சூடு – இரு வாரத்தில் மூவர் படுகொலை!

Tuesday, July 28th, 2026


…
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் இம்மாதம் 11ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையிலான 14 நாள்களுக்குள் மாத்திரம் 10 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் மாத்திரம் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். 

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர், அனைத்துத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் திட்டமிடப்பட்ட பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை என்று குறிப்பிட்டார்.
தாக்குதல்களைத் திட்டமிடும் பிரதான குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு, தங்கள் எதிரிக் கும்பலின் உறவினர்கள் அல்லது உதவியாளர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர்.

ஒப்பந்தக் கொலைகளுக்குப் பணத்துக்குப் பதிலாகச் சிறிய அளவிலான போதைப்பொருள்களே கூலியாக வழங்கப்படுவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைக்குக் கடுமையாக அடிமையானவர்களே இத்தகைய கொலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர்.

கடந்த 25ஆம் திகதி அன்று கொழும்பு – பெல்லன்விலையில் நடந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் ஆகிய இரு சந்தேகநபர்களும் சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் நேரடி வழிகாட்டலின் கீழ், தொலைபேசி மற்றும் தகவல் தொடர்புப் பகுப்பாய்வுகள் உட்பட உளவுத்துறை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
இம்மாதம் 11ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெற்ற முக்கியத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் வருமாறு –

ஜூலை 11: மாத்துகம, நெபொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் வீடொன்றை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜூலை 15: கட்டுநாயக்கவில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகநபர் ஒருவர் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரியின் சேவைத் துப்பாக்கியைப் பறித்து அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அதிகாரி காயமடைந்தார்.

ஜூலை 16: நவகமுவ, வண்டுரம்புமுல்ல பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜூலை 19: தெஹிவளை – கல்கிஸ்ஸை பொது மயானத்தில் பணியாற்றிய 56 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்தார்.

 ஜூலை 19: பிலியந்தலை, பொக்குந்தர பகுதியில் வாளால் தாக்க முயன்ற 24 வயதுச் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார்.

ஜூலை 21: தேவிநுவர பகுதியில் கடற்றொழிலாளி ஒருவரின் வீட்டை நோக்கி காரில் வந்த ஆயுததாரிகள் பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஜூலை 22: பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீடு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினர்.

ஜூலை 23: வத்தளை, பள்ளியாவத்தை பகுதியில் குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜூலை 23: தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஜூலை 25: தெஹிவளை – பொரலஸ்கமுவ வீதியில் அமைந்துள்ள பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகில் 55 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106