இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்! – பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

Monday, May 18th, 2026

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக கௌரவ நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண ஆளுநரின் விசாரணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு எழுத்தாணை விண்ணப்ப வழக்குகளையும் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படவிருந்த விசாரணையை இரத்துச் செய்யக் கோரி கடந்த 27.04.2026 அன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்களின் ஆரம்பச் சமர்ப்பணங்களை ஏற்று மன்றால் இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து, வடமாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி திரு.புவனேந்திரராஜா ஜனந்தன், கடந்த 11.05.2026 மற்றும் 13.05.2026 ஆகிய தினங்களில் வலுவான சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார். இவ்வாறான எழுத்தாணை வழக்குகள் அனுமதிக்கப்படுவது அரச இயந்திரத்தின் செயற்பாட்டை முடக்கும் எனவும், மக்கள் பிரதிநிதிகளே என்றாலும் அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வர வேண்டுமே தவிர, அவை விசாரணையின் முன்னரே தடுக்கப்படக்கூடாது எனவும் அவர் மன்றில் வாதிட்டார். அத்துடன் மனுதாரர் நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளமை தொடர்பிலும் அவர் தனது ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் அவர்கள் முன்னிலையாகி இடைக்காலத் தடைக் கட்டளையை நீடிக்கக் கோரி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.

இன்றைய தினம் கட்டளையை வழங்கிய கௌரவ நீதிபதி, மனுதாரர்கள் மன்றை எவ்வாறு தவறாக வழிநடத்தினார்கள் என்பதைத் சுட்டிக்காட்டினார். ‘ஆளும் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இவ்விசாரணை தொடர்பான வர்த்தமானி பிரசுரிக்கப்படுவதற்கு முன்பாகவே அது பற்றி அறிந்திருந்து கருத்து வெளியிட்டார்’ என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும், குறித்த விசாரணை தொடர்பான விடயம் வர்த்தமானியில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமையை மன்றில் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், மனுதாரர் மன்றைத் தவறாக வழிநடத்தியே குறித்த இடைக்கால நிவாரணத்தைக் கோரியிருந்தமை தொடர்பில் மன்று திருப்திப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி ஏற்கனவே மனுதாரருக்கு விசாரணை தொடர்பில் விடயங்களைக் குறிப்பிட்டு, சமூகமளிக்குமாறு கடிதம் அனுப்பியதன் ஊடாக அவருக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

சட்ட ஏற்பாடுகளின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நீதிமன்றம் தன்பொறுப்பில் எடுத்து விசாரணையை மன்றில் முன்னெடுக்க முடியாது எனவும், சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களும் உரிய பொறுப்புக்கூறலைக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் வலியுறுத்தினார். (அதேவேளை, ஒருவருக்கு எதிரானவர்களின் கருத்துக்களை மட்டும் உள்வாங்கி ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படுமாயின் அது ஆராயப்பட வேண்டிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்).

இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த மேல் நீதிமன்றம், மன்றைப் பிழையாக வழிநடத்தியமை மற்றும் சட்ட ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டி, மனுதாரர்களால் பெறப்பட்ட இடைக்காலத் தடைக் கட்டளையை இரத்துச் செய்தது. அத்துடன் ஆளுநரின் விசாரணையை முன்னெடுப்பதற்குரிய அனுமதியை வழங்கி இரண்டு வழக்குகளையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106