தடுப்புக் காவலில் இருந்த கைதி உயிரிழப்பு – உயிரிழப்புக்கு வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதையே காரணம் என பெற்றோர் முறைப்பாடு – விசாரணைக்கு விசேட பொலிஸ் அதிகாரிகள் குழு நியமனம்!

Monday, November 20th, 2023

திருட்டு குற்றச்சாட்டில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேநேரம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

முன்பதாக உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து சந்தேக நபர்கள்  மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொலிசாரால் முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர் சிறைச்சாலையில் இருந்த போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி அடித்து , சித்திரவதை புரிந்ததுடன் ,பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பையொன்றினால் முகத்தை மூடி சித்திரவதை புரிந்தனர் என, பொலிஸாரினால் சித்திரவதைக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் இளைஞன் வைத்தியசாலையில் கூறிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றம் சட்டி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது , தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசியதாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் ” என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.

பின்னர் எனக்கு குடிக்க சாராயம் தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள்.

பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை. என தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதேவேளை , உயிரிழந்த இளைஞனை கடந்த 08 ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்தனர். அவர் தனியே செல்ல பயத்தில் நண்பர் ஒருவரையும் கூட அழைத்து சென்று இருந்தார்.

பொலிஸ் நிலையம் சென்ற இருவரும் வீடு திரும்பாததால் மறுநாள் 09ஆம் திகதி பொலிஸ் நிலையம் சென்று விசாரித்த போது , பொலிஸார் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

பின்னர் 10 ஆம் திகதியும் நாம் அவர்களை தேடி பொலிஸ் நிலையம் சென்ற போது உயிரிழந்த அலெக்ஸ்சின் கதறல் சத்தம் எமக்கு கேட்டது. நாம் அவரை காட்டுமாறு கோரிய போது , பொலிஸார் எம்மை மிரட்டி அனுப்பினார்.

அதனை அடுத்து நாம் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம்.

இதையடுத்து கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த அலெக்ஸ் மற்றும் அவருக்கு உதவியாக சென்ற அவரது நண்பர் மீது, வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களவு சம்பவத்ததுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய போது, அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலையே இருந்தனர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் அவர்களை தடுத்து வைத்திருந்த போது, அலெக்ஸ்சின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் , சிறைச்சாலை நிர்வாகத்தால் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை  உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106