கிளி. மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்கள் நியமனம்!

Sunday, June 17th, 2018

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முதற்தடவையாக 8 உள்ளக பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த வருடம் ஜீன் மாதம் இலங்கை மருத்துவ சபை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான அனுமதியை சுகாதார அமைச்சுக்கு வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பயனாக தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எட்டு உள்ளக பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் மட்டுமே இதுவரை காலமும் உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வருகின்ற உள்ளகப் பயிற்சி மருத்துவர்களில் எட்டுப்பேரில் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் என்றும் ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து வருடந்தோறும் 90 மருத்துவர்கள் மருத்துவக்கல்வியை நிறைவுசெய்து உள்ளகப் பயிற்சிக்குச் செல்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள எட்டு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களில் அநேகமானவர்கள் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைப் பெற்றவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

மீள் நிரப்பு நிலையங்களில் மேலதிகமாக எரிபொருள்: தாங்கி ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன - வலுசக்தி அமை...
விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு திங்கள்முதல் விவசாயிகளுக்கு நட்டஈடு - விவச...
வேட்பாளர்களிடையே காகிதத்துக்கான கேள்வி அதிகரிப்பு - அத்தியாவசிய பணிகளுக்கு காகித தட்டுப்பாடு!