பின்கதவால் அரசுடன் பேச்சு : மக்கள் நடுத்தெருவில் – சிவசக்தி ஆனந்தன்!
Wednesday, May 3rd, 2017
கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் பின் கதவால் அரசோடு பேசி தங்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களையும் பதவிகளையும் பெற்றுக்கொள்வதால் தான் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுடன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளம், வீரபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை எமது உரிமைக்காகவும் தொழிலாளர்களின் உரிமைக்களுக்காகவும் இந்த மே தினத்தைக் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். நீண்ட காலமாகத் தமிழ் மக்களுக்கு இந்த மண்ணிலே இழைக்கப்பட்ட அநீதிகள் ஒரு புறம். அதனால் தொழில் ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்னொருபுறம். ஆகவே இந்தத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். எங்களுடைய இளைஞர்கள், யுவதிகள், தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் எல்லோருக்குமே ஒரு விமோசனம் கிடைக்க வேண்டுமாகயிருந்தால் நீண்டகாலமாக இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும்.
தேசிய அரசு என்று .இந்த அரசைக் கொண்டு வந்ததிலிருந்து இந்த 2 வருட காலத்துக்குள்ளே இந்த மேடையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. போர் முடிவுற்று 8 வருடங்கள் ஆகியும் இங்க உள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டம் முறையாக வழங்கப்படவில்லை. உங்களுக்குத் தெரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 4 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. 4 அரசியல் கட்சிகளைக் கொண்டு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை கூட்டுவதே கல்லில் நார் உரிக்கும் செயற்பாடாகவுள்ளது. நாங்கள் பல தடவைகள் இந்த விடயங்களைக் கூறித் தமிழ் மக்களுக்கு உள்ள அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து அரசியல் தீர்வு காணும் விடயம் வரை எடுத்த தீர்மானங்கள் அத்தனையையும் தலைகீழாக மாற்றித் தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையும் தன்னிச்சையாக எடுத்த ஒரு முடிவுதான் இன்று இந்த மக்கள் வீதியிலிறங்கிப் போராடும் நிலைமைக்குக் கொண்டு சென்றுள்ளது. எங்கள் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
இந்தப் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பில் உள்ள 4 பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கிடையே பேச்சு நடத்தப்பட வேண்டும். நாங்கள் தொட்டுத் தொட்டு ஒவ்வொரு விடயங்களுக்கும் தனித் தனியாகப் பேசிக்கொண்டு இருக்க முடியாது. இதனை ஒரு வருடத்திற்கு முன்னரே சம்பந்தன் ஐயாவுக்கு சொல்லியிருந்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாங்கள் எடுத்த தீர்மானங்கள் எதனையுமே சம்பந்தன் ஐயாவின் தலைமையில் உள்ள தமிழரசுக் கட்சி நடைமுறைப்படுத்தவில்லை. ஆட்சி மாற்றத்திலிருந்து ஐ;கிய நாடுகள் சபை வரை இலங்கை அரசுக்கு கால அவகாசத்தை நீடித்துக் கொடுக்கும் செயற்பாட்டைத் தான் கூட்டமைப்பில் உள்ள சில தலைவர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிபந்தனையற்ற ஆதரவால் தமிழ் மக்களுக்கு என்ன விமோசனம்?
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கடந்த 16 வருட காலமாக உட்கட்சி ஜனநாயகக் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றோம். இதனை ஒரு வெளிப்படையான ஜனநாயக ரீதியாக கட்சியாக மாற்ற வேண்டும் ஆனால் முடியவில்லை. ஒரு சில மனிதர்கள்தான் முடிவுகளை எடுக்கின்றார்கள். இந்தச் சர்வாதிகாரப் போக்கை மாற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கின்றது. இந்த அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மகிந்த ராஜபக்ஷ வந்து விடுவார் என்று சொல்கிறார்கள். இன்று மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க ஆட்கள் இல்லை என்றார்.
Related posts:
|
|
|


