காணாமற்போனோர் விவகாரம் – புதிதாக ஆணைக்குழுக்கள் வேண்டாம் –ஜனாதிபதிக்கு டக்ளஸ்  கடிதம்!

Friday, September 11th, 2026



காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைக்கு பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாத நிலையில், புதிதாக ஆணைக்குழுக்களை நியமிப்பதைத் தவிர்த்து, ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகளைத் தொகுத்து, அவற்றின் அடிப்படையில் உரிய பரிகாரங்களை காண வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

நாட்டில் காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் தொடர்கின்றது.

இது தொடர்பில் 1990 களில் இருந்து பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் சில விசாரணைகள் நிறைவுபெற்று அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், அந்த அறிக்கைகளை நடைமுறைப்படுத்தி பிரச்சினைக்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

அதனடிப்படையில் தற்போதைய நிலையில் மீண்டும் புதிதாக ஆணைக்குழுக்களை நியமித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு பதிலாக, ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கைகளைப் பெற்று, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான அறிக்கையை தயாரிப்பது சிறந்த அணுகுமுறையாக அமையும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தற்போது புதிதாக முறைப்பாடுகளை முன்வைக்க விரும்புபவர்கள் இருப்பின், அவர்கள் தங்களது முறைப்பாடுகளை காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் காணாமற்போனோர் விவகாரம் 1983ஆம் ஆண்டிலிருந்து ஆராயப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதன்படி, 1983 முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி தொடர்பில் தனியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், அவ்வாறு புதிதாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் அறிக்கையையும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தொகுக்கப்படும் அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய பரிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், செம்மணி புதைகுழி உள்ளிட்ட நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து பொது மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலேயே நாங்கள் தான் முதலில் இந்த விடயத்தை கையில் எடுத்து வெளிக்கொண்டுவந்தவர்கள் எனவும் டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், காலப்போக்கில் அந்த விவகாரம் பல்வேறு தரப்பினரின் கைகளுக்குச் சென்று வேறு திசைகளை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, காணாமற்போனோர் விவகாரத்தையும் மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயங்களையும் மேலும் நீண்டகாலம் இழுத்தடிக்காமல், ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்வார் என எதிர்பார்ப்பதாகவும்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106