பலாலி காணி விடுவிப்பு போராட்டம் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் உட்பட பலருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் பொலிசார் வழக்குத் தாக்கல்!

Tuesday, August 18th, 2026


….
​பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்புப் போராட்டத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசபிள்ளை வேந்தன் மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட காணி உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகப் பலாலி பொலிசாரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

​உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சொந்தக் காணிகளை  விடுவிக்குமாறு கோரி, பலாலி மீள்குடியேற்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்படுவரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதியன்று பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள டி (T) சந்தியில் காலை 09:30 மணி முதல் நண்பகல் 01:00 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

​இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பலாலி பிரதான வீதி டி சந்திப் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டே, கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்று பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

​இதற்கமைய, மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கிலக்கம் MA/MC/PC/07381/26-B இன் கீழ் குறித்த நபர்களுக்கு நீதிமன்றால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

மேலும், அன்றையதினம் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

​இதன்படி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் ஜனநாயகப் போராளிகள் கட்சி தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், எம். குணசேகரம், வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர்
​ஆகியோர் மீதே பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

​இதேவேளை, தங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும், நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினருக்கு இதுவரை எந்தவிதமான உத்தியோகப்பூர்வ தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என அறியமுடிகிறது.

Related posts: