உற்பத்திச் செலவுடன் 30 வீத இலாபத்தைச் சேர்த்து, நெல்லுக்கு  உத்தரவாத விலையாம் –  துறைசார் அமைச்சு!

Wednesday, July 29th, 2026

நெல் கிலோ ஒன்றின் உற்பத்திச் செலவுடன் 30 சதவீத லாபத்தைச் சேர்த்து, விளைச்சலுக்கு நியாயமான உத்தரவாத விலையை நிர்ணயிக்கும் கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறு போக நெல் விவசாயத்திற்கான செலவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற விசேட விவசாயிகளின் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய திணைக்களம், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியன இணைந்து இந்த புதிய செலவு அறிக்கையைத் தயாரித்துள்ளன.

அதன்படி, சிவப்பு நாடு நெல் கிலோ ஒன்றின் உற்பத்திச் செலவு 76 ரூபாயாகும்.

வெள்ளை நாடு நெல் கிலோ ஒன்றின் உற்பத்திச் செலவு 87 ரூபாய் என்றும், சம்பா நெல் கிலோ ஒன்றிற்கான உற்பத்திச் செலவு 97 ரூபாய் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கீரி சம்பா நெல் கிலோ ஒன்றின் உற்பத்திச் செலவு 119 ரூபாய் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் அரசாங்கத்தினால் ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் உரம் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த மானியத்தையும் உள்ளடக்கியே இந்த உற்பத்திச் செலவு கணக்கிடப்பட்டுள்ளதாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோதுமை மா, அரிசி மற்றும் பாஸ்மதி போன்ற பெருமளவிலான உணவுப் பொருட்களை இன்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் கே.டி. லால்காந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

000

Related posts: