மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சேவையை மேலும் விரிவுபடுத்த துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பவித்ரா வலியுறுத்து!

Monday, October 11th, 2021

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட முன்னேற்ற மதிப்பாய்வில் கலந்து கொண்ட அமைச்சர் புதிய தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகள், உரிமை கைமாற்றல் மற்றும் சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல் ஆகியவை ஒரே நாளில் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது ஒருநாள் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் சேவை வேரஹெர, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களில் மட்டுமே இடம்பெற்று வருகிறது.

அதேநேரம் ஒருநாள் வாகன பதிவு சேவை நாரஹேன்பிட்ட, கம்பஹா, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாண அலுவலகங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வெரஹெரா, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய அலுவலகங்களில் மட்டுமே ஒன்லைன் சேவைகள் இடம்பெறுகின்றன.

இந்த சேவைகளை விரிவுபடுத்தவும், இந்த சேவைகளை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள கிளை அலுவலகங்கள் மூலம் பொதுமக்கள் பெற வசதிகளை ஏற்படுத்துமாறும் அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வீடு வசதிகள் அற்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக கிராம வேலைத்திட்டம் - அமைச்சர் கயந்த கருணாத்திலக்க!
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கல்வி அமை...
போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமுகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் ...