மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளியில்செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்து!பொலிஸ்!

Tuesday, May 25th, 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்காக இன்று அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு அடுத்த மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அத்தியாவசிய பொருள்களை கொள்வன செய்வதற்காக நடமாட்டக் கட்டுப்பாடு இன்றிரவு 11 மணி வரையில் தளர்த்தப்பட்டிருந்தது.

அதேநேரம் இன்றிரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள நடமாட்ட கட்டுப்பாடானது எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.

எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அதன்பின்னர் 31 ஆம் திகதி இரவு 11மணிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடானது ஜூன் 4 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

இதனையடுத்து அன்றையதினம் இரவு 11மணி முதல் ஜூன் 7ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடமாட்ட கட்டுப்பாடு தளர்த்தப்படும் இன்றையதினமும், எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜூன் மாதம் 4ஆம் திகதிகளில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியும்.

இதற்காக, இந்த மூன்று தினங்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் உள்ள சகல வெதுப்பகங்கள், சில்லறை விற்பனையகங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்படும்.

அத்துடன் நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, உணவு, மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பிரதேச மட்டத்தில் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரையில் சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும், எதிர்வரும் 31ஆம் மற்றும் ஜூன் மாதம் 4ஆம் திகதிகளில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில்செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், அவ்வாறு வெளிச்செல்பவர்கள் நடைதூரத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு மாத்திரமே செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பொருட்கொள்வனவுக்காக வாகனங்களில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, தேசிய அடையாள அட்டைக்கு அமைய வெளிச்செல்லும் முறை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டுக்கு சேவை செய்த மனிதனை அவமதிப்பது தவறு - மகிந்தவுக்கு பிரதமர் பதவி பெரிய விடயமல்ல - பொதுஜன பெ...
அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டமாக கிளிநொச்சி - மாவட்ட அரச அதிபர் தெரிவ...
நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்கி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை - கல்வி அமைச்சர் அ...