காணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, March 20th, 2021

காணாமல் போனோரின் உறவினர்கள் சார்பில் குழு ஒன்றினை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, ஒரு மாதத்தினுள் குறித்த விவகாரத்திற்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

காணாமல் போனோரின் உறவினர்களுடன் இன்று(20.03.2021) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருவதுடன், பல்வேறு வாழ்வாதார  பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் குறித்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் உறவுகளை இழந்தமையினால் எதிர்கொண்டு வருகின்ற  வாழ்வாதார பாதிப்புக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

காணாமல் போனோரின் உறவினர்களின் வலிகளை அனுபவ ரீதியாக புரிந்து கொள்வதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரத்தினைத்தினை வழங்கி குறித்த விவகாரத்தினை தீர்த்து வைக்க விரும்புவதாகவும் எந்தவிதமான அரசியல் நோக்கங்களும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு மாத காலத்தினுள் குறித்த விவகாரத்தினை தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து நுற்றுக்கணக்கான காணாமல் போனோரது உறவுகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்திருந்தனர்.

அதுமாத்திரமன்று தமது நியாயபூர்வமான கொரிக்கைகளையும் எதிர்பார்ப்பகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியப்படுத்தியிருந்த அதேவேளை தமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளையும் பரிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்..

இதனிடையே ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் கடந்தகாலங்களில் கைவிட்டதுபோலல்லாது தாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முழுமையாக நம்புவதாகவும் அவரூடாகவே தாம் எதிர்பார்க்கும் விமோசனம் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் காணாமல் போனோரது உறவுகள் தெரிவித்திருந்தனர்.

அதுவேளை தம்மை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சருக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குடும்பங்களை  தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் - ...
சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் !
தமது பூரவீக காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநி...

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம...
கிளிநொச்சி – புன்னைநீராவியில் 5.3 மில்லியன் ரூபா செலவில் விவசாய உற்பத்தி களஞ்சியசாலை – கட்டுமாணப் பண...
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ...