13 ஆவது திருத்தம் குறித்து ஈ.பிடி.பியின் நிலைப்பாட்டை  கேட்டறிந்துகொண்ட  அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் அமைப்பு!

Sunday, November 3rd, 2024

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது

தென் பகுதியில் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனமானது குறித்த விடயம் தொடர்பில் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவருமான சி.தவராசா கருத்து கூறுகையில் –

எமது கட்சியின் நிலைப்பாடு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதை இலக்காக கொண்டது.

அதனடிப்படையில் 13 ஆம் திருத்தத்தினை மூன்று கட்டங்களாக அமுல்ப்படுத்துவதன் ஊடாக முழுமையாக அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.

முதலாவதாக, நிறைவேற்று செயற்பாடுகள் ஊடாகவும் நிர்வாக செயற்பாடுகள் ஊடாகவும் மாகாங்களில் இருந்து எடுக்கப்பட்ட விடயங்களை மீளக் கையளிப்பது. இதனை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்த முடியும்.

இரண்டாவது, 13  ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட முன்னர் நடைமுறையில் இருந்த சில சட்ட ஏற்பாடுகளுக்கும் 13 ஆம் திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட சில விடயங்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளில் கணிசமானவற்றை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மை ஊடாக திருத்திக் கொள்ள முடியும்.

முன்றாவது கட்டமாகஅரசியலமைப்பில் அடிப்படையில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் சிந்திப்பது

இதை எமது கட்சி அன்றிலிருந்து இன்றுவரை எந்தவித மாற்றமோ வழுவழுப்புக்களோ இல்லாது பல தடைகள் வந்தபோதும் எடுத்துக் கூறியிருக்கின்றது.

அதேபோன்று இந்த நிலைப்பாட்டை பலவிதமான சந்திப்புகள் ஆணைக்குழுக்கள் முன்னிலையிலும்  கூறி உள்ளோம்  எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

000

Related posts:

யுத்தத்தின் வலிகளை துடைப்பதற்காக கிளிநொச்சி மக்களுக்கு எமது கட்சியின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின...
முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு பூஸ்ரர் தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்!
சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை - அரசாங்க பிரதானிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்த...