காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் – இதுவரை 07 சடலங்கள் மீட்பு!
Thursday, November 28th, 2024காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 07 சடலங்கள் (ஜனாஸாக்கள் ) மீட்கப்பட்டுள்ளது
காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
நேற்று இருள் இரவு சூழ்ந்திருந்த போதிலும் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இன்று காலையும் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இடம்பெற்று வந்தது. அதன்போது இதுவரை மொத்தமாக 07 ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் ஜனாசாவும், வாகன சாரதியின் ஜனாஸாவும் மீட்கப்பட்டது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று காலை இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
மீட்பு பணியின் போது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத நிலை உள்ளதாகவும், குறைந்தது இன்னும் 02 பேராவது வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஜனாஸாக்கள் கையளிக்கப்பட்டு வருகிறது.
000
Related posts:
|
|