மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 19th, 2016

மறுபடியும் தமிழக மக்கள் தமது முதல்வராக உங்களையே தெரிவு செய்திருப்பது உங்கள் மீதான அசையாத நம்பிக்கையை மெய்ப்பித்து காட்டியிருக்கிறது என மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது –
தமிழக மக்களின் ஆணையை ஏற்று மறுபடியும் ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகும் உங்களால் தமிழகத்தின் நல்லாட்சி தொடர்ந்தும் நிலவவேண்டும் என்பதையே தமிழக மக்கள் விரும்பியிருக்கிறார்கள்.
தமிழக மக்களும் ஈழத்தமிழ் மக்களும் என்றுமே பிரித்துப்பார்க்க முடியாத தொப்புள்க் கொடி உறவுகள். இந்த பூர்வீக வரலாற்று உறவை உணர்ந்து நீங்கள் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருவது குறித்து நான் அகம் மகிழ்ந்து பாராட்டுகிறேன்.
உங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியால் தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழத்தமிழ் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். நீடித்த துயர்களின் மத்தியில் இருந்து எழுந்துவரும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வென்று நிமிர்ந்தெழுவதையே என்றும் இலட்சிய கனவாக கொண்டிருக்கிறார்கள்.
எமது மக்களின் ஆழ்மன விருப்பங்கள் யாவும் நிறைவேற தொடர்ந்தும் நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்பது எமது நம்பிக்கை.
மறுபடியும் தமிழகத்தில் மலர்ந்திருக்கும் உங்களது ஆட்சிக்கும் உங்களுக்கும் ஈழத்தமிழ் மக்களின் சார்பாக எனது வாழ்த்துக்கள்! – என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts:


அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!
கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...