மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அதிகாரிகள் உதாசீனம் செய்வது மாநகரின் அபிவிருத்தியை பாதிக்கின்றது – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் இரா செல்வவடிவேல்!

Tuesday, April 9th, 2019

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் பலவாறாக எமது மாநகரசபைக்கு கிடைத்தாலும் அவை தொடர்பில் கூடியளவு அவதானம் செலுத்தி அவற்றை ஆராய்ந்தறிந்து உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் இச்சபையின் கவனத்திற்கு கொண்டுவந்து விவாதிக்கப்படுமேயானால் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் மாநகரின் மராமத்துக் குழு தலைவருமான இரா செல்வவடிவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் சபையின் முதல்வர் ஆர்னோல் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் கூடியது. இதன்போது மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தீர்வ காணப்படாது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.  இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இச்சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களதும் உத்தியோகத்தர்களதும் நோக்கம் எமது மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே. ஆனால் மக்கள் பிரதிநிதிகளாகிய எமது கருத்துக்களை அதிகாரிகள் உதாசீனம் செய்யும் சந்தர்ப்பங்கள் இங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக இச்சபையின் பல்வேறு செயற்பாடுகள் முடக்கப்பட்டு அல்லது மோசடிகள் ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகளை உருவாக்கி வருகின்றன. அதுமட்டுமல்லாது பல ஏற்கனவே ஒரு துறைக்கு பொருத்தமற்ற ஊழியர் அல்லது அத்துறையை மேற்கொள்ளும் போது துஷ்பிரயோகங்களை மேற்கொண்டவர் என இனங்காணப்பட்டாலும் அவ் ஊழியர்கள் தொடர்ந்தும் அதே இடத்தில் பணிக்கமர்த்துவது பாரிய மோசடிகளை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன. இதை பல தடவைகள் இச்சபையில் தெரிவித்திருந்தும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்கின்றது. மேலும் எமது சபையின் இறைவரித் திணைக்களம் வரிகளை வசூலிக்கும்போது குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டவர்களையே தொடர்ந்தும் பணிக்கமர்த்தி செயற்பட்டுவருகின்றது. இந்நிலை ஏன் என்ற கேள்வியே தற்போது அனைவரிடமும் காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது எமது சபைக்குட்பட்ட பகுதிகளில் வரி அறவீடுகள் மிக மோசமானதாகவே காணப்படுகின்றது. சபையின் ஊழியரல்லாத ஒருவர் முச்சக்கர வண்டிகளிடம் வரி அறவிடுகின்றார். ஆனால் அதற்கான உறுதிப்படுத்திய சிட்டைகளை அவர் வழங்குவதில்லை என்ற நிலையும் காணப்படுகின்றது.  

இதே நிலைதான் பாதுகாப்பு ஊழியர்களது பக்கத்திலும் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது எமது சபையில் 8 “கலிபவுசர்”கள் இருக்கின்ற போதிலும் அவற்றுள் 3 பவுசர்களே இயங்கும் நிலையில் இருக்கின்றன. அதிலும் ஒன்றுதான் முழுமையான இயங்கும் தரத்துடன் காணப்படுகின்றது. இந்த இயங்குநிலையிலுள்ள “கலிபவுசர்”கள் பழுதானால் யாழ் மாநகரின் கழிவகற்றல் கேள்விக்குறியானதாகவே இருக்கும்.

ஆனால் இவை தொடர்பில் துறைசார் தரப்பினரிடம் சுட்டிக்காட்டினால் தமது நிர்வாகம் சரியாக செயற்படுகின்றது என்கின்றனர். ஆனால் இதைத்தான் எமது மக்கள் பிரதிநிதிகள் நிர்வாக சீர்கேடு என்கின்றனர்.

அந்தவகையில் இந்த மாநகரின் அபிவிருத்தியை கட்டியெழுப்ப வேண்டுமானால் அனைத்து உறுப்பினர்களதும் பங்களிப்பு மட்டுமல்லாது அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கற்ற ஒத்துழைப்பும் அவசியமாகின்றது.

எனவே இந்த நிர்வாக அசமந்தத்தனங்களிலிருந்து இச்சபை மீளவேண்டும் அதற்கான வழிவகைகளை கண்டறியாது வெறுமனே சபையில் விதண்டாவாதங்களை பேசி பயனில்லை என்றும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

Related posts: