மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் – மண்டைதீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 28th, 2018

மக்களின் தன்னம்பிக்கைக்கும் தொழில்துறை மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்ட மண்டைதீவு மத்திப் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நான் கட்சியின் நலனுக்கு அப்பால் மக்களது நலன்களையும் மேம்பாடுகளையுமே முக்கியமானதாகக் கருதுகின்றேன். நான் எனது மக்களுக்காக கடந்த காலங்களில் அரசுகளுடன் இணக்க அரசியலை முன்னெடுத்து அதனூடாகப் பலவற்றை செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.

அதனடிப்படையில்தான் நெடுந்தீவு ஊர்காவற்றுறை மற்றும் வேலணை ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் முன்னைய காலங்களில் இப்பகுதி மக்களின் எகோபித்த ஆதரவுடன் குறித்த பிரதேச சபைகளை வென்றெடுத்து பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்தது மட்டுமன்றி இப்பகுதிகளுக்கென அரசிடமிருந்து மேலதிகமாக விஷேட நிதியாக தலா இருநூறு மில்லின் ரூபாவை பெற்று அந்த நிதியூடாகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததையும் தீவக மக்கள் நன்கறிவார்கள்.

கடந்தகாலங்களில் தமிழர் வரலாற்றைப் பொறுத்தவரையில் சேர். பொன் இராநாதன் முதல் சம்பந்தன் வரையிலான தமிழ் தலைவர்கள் எமது மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்காக சரியான அணுகுமுறைகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன் இந்தத் தழிழ் அரசியல் தலைமைகள் தாம் முன்வைத்த கோரிக்கைகளில் நம்பிக்கையும் வைத்திருந்ததில்லை.அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் அணுகவும் இல்லை அக்கறை செலுத்தவும் இல்லை என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாலைதீவில் தங்கி நின்று தொழில் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளல், வீதிப்புரமைப்பு, வீடமைப்பு, குடிநீர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மக்கள் இதன்போது கோரிக்கைகளாக முன்வைத்திருந்தனர்.

இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை தேர்தல் வெற்றிக்குப் பின்னர் குறித்த தேவைகளை முன்னுரிமைப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாவவும் தெரிவித்துள்ளார்.

Related posts:


மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள்  அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது! செயலாளர் நாய...
உயிர் நீத்தோரை மட்டுமன்றி, உயிர்வாழப்  போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்து உதவிட முன்வர வேண்டும் - ...
எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் - பருத்தித் துறையில் டக்ளஸ் எம்.பி.