பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளின் உதவி அவசியம்!

Saturday, May 4th, 2019

சர்வதேச பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் என பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பென் வெலஷ் நேற்று ஜனாதிபதியை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல் சர்வதேச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகுமென தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, இத்தகைய உலக பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி அவசியமாகும் எனவும் பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், அனைத்து நாடுகளினதும் புலனாய்வு சேவைகளையும் இரகசிய தகவல்களையும் பரிமாறிக்கொள்ளுதல் அடிப்படை தேவையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் மற்றும் எச்சரிக்கைகளை இனங்கண்டுகொள்வதற்காக பிரித்தானிய அரசாங்கம் பின்பற்றியதை போன்று சகல உள்நாட்டு புலனாய்வு துறையினரின் தகவல்களை ஒன்று திரட்டும் ஒன்றிணைந்த விசாரணை மையமொன்றினை தாபிக்க வேண்டும்.

அதற்கு தேவையான ஒத்துழைப்புகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Related posts: