ட்ரம்பிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

Saturday, July 20th, 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பை குற்ற விசாரணை மூலம் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அல் கிரீன் என்ற உறுப்பினர் பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள பிரதிநிதிகள் சபையில், இந்த தீர்மானம் மீது விவாதம் இடம்பெற்றதுடன், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சபாநாயகர் நான்சி பெலோசி தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார். இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக 332 வாக்குகளும், ஆதரவாக 95 வாக்குகளும் பதிவானதால் பதவிநீக்கத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல்கள் இருந்த போதும் ஜனநாயகக் கட்சியினரில் பலர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: